×

தொடர் மழை, பூச்சி தாக்குதலால் ஓசூர் ரோஜா மலர்களின் ஏற்றுமதி பாதிப்பு: விவசாயிகள் கவலை

ஓசூர்: தொடர் மழை மற்றும் பூச்சி தாக்குதல் காரணமாக, ஓசூரில் ரோஜா மலர்களின் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், தேன்கனிக்கோட்டை, பேரிகை, சூளகிரி, கெலமங்கலம், தளி உள்ளிட்ட பகுதிகளில் நிலவும் குளிர்ந்த சீதோஷ்ண நிலை காரணமாக, 475 ஹெக்டேர் பரப்பளவில் பசுமைக் குடில் அமைத்து, விவசாயிகள் ரோஜா மலர் சாகுபடி செய்து வருகின்றனர்.

இங்கு சாகுபடி செய்யப்படும் தரமான ரோஜா மலர்களுக்கு, வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளதால், பெங்களூரு வர்த்தக மையம் மூலமாக, சிங்கப்பூர், மலேசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. குறிப்பாக, ஒவ்வொரு ஆண்டும் இங்கிருந்து ரோஜா மலர்கள் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா காலங்களில் பல கோடிக்கு வர்த்தகம் ஏற்படும் வகையில் ஏற்றுமதியாகி வந்தது. கடந்த 2015ம் ஆண்டு முதல் உற்பத்தி பாதிப்பு, மழையின்மை, வறட்சி, கொரோனா நோய் தொற்று அச்சுறுத்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், வெளிநாடுகளுக்கு ரோஜா மலர் ஏற்றுமதி படிப்படியாக சரிந்து வருகிறது. இந்நிலையில் புதிய ரகங்கள் அறிமுகப்படுத்தப்படாததால், வெளிநாடுகளில் ஓசூர் மலர்கள் மீதான கவன ஈர்ப்பு வெகுவாக குறைந்துள்ளது. இதனால் ஏற்றுமதி சரிந்துள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

இதுதொடர்பாக தேசிய தோட்டக்கலைத் துறை வாரிய இயக்குநர் பாலசிவபிரசாத் கூறியதாவது:
நெதர்லாந்து, ஆப்பிரிக்கா உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில், ரோஜா மலர் சாகுபடி அதிகரித்துள்ளது. அங்கு ஒவ்வொரு ஆண்டும், புது,புது ரகங்களில் மலர் சாகுபடி செய்கின்றனர். ஓசூர் பகுதிகளில் கடந்த 15ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட தாஜ்மஹால் ரக ரோஜா மலர்கள் மட்டுமே, வெளிநாட்டு சந்தையில் போட்டியிடும் நிலை உள்ளது. புதுவகையான ரோஜா ரகங்கள் இல்லாததால், நமது மலர்கள் மீதான ஈர்ப்பு குறைந்துள்ளது. வழக்கமாக கிறிஸ்துமஸ், புத்தாண்டு காலங்களில் இங்கு உற்பத்தி செய்யப்படும் மலர்களுக்கு, நல்ல வரவேற்பு கிடைத்து, தேவை அதிகரித்து, அதிக அளவில் ஏற்றுமதி ஆகும். தற்போதுள்ள சூழலில், தொடர் மழை காரணமாக, குறிப்பாக டிசம்பர் மாதங்களில் பெய்யும் மழை காரணமாக, டௌனியா என்ற பூச்சி தாக்குவதால், ரோஜா மலர்களின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் உலக மலர் சந்தைக்கு தேவையான அளவு உற்பத்தியை செய்ய முடியுமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

 அதேபோல், தற்போது மீண்டும் கொரோனா அச்சுறுத்தல் துவங்கியுள்ள நிலையில், காதலர் தினத்திற்கான ஏற்றுமதி சற்று பாதிக்கப்பட்டு இருக்கிறது. தேவை குறித்து கணிப்புகளை கணிக்க இயலாத அளவு இருக்கிறது. ஏற்கனவே மத்திய கிழக்கு நாடுகளில், மலர் சந்தையில் சீனா ஆதிக்கம் செலுத்தி வந்தது. இதன் காரணமாக மீண்டும் நோய் தொற்று அச்சுறுத்தல் காரணமாக, மலர் உற்பத்தி பாதிக்கப்படுவதுடன் ஏற்றுமதியும் நிச்சயமாக பாதிக்கும். மத்திய அரசு மலர்களுக்கான கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ள, ரூ.1 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதில், தமிழகத்தில் ரூ.5,990 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் தற்போது வரை சுமார் ரூ.200 கோடிக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது மிகவும் வருத்தத்திற்குரிய ஒன்றாகும்.

 எனவே, இந்த நிதியை முறையாக பயன்படுத்தி, மலர் உற்பத்தி விவசாயிகளின் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் ரோஜா உள்ளிட்ட மலர்கள் ஆராய்ச்சி மற்றும் கட்டமைப்புகளை மேம்படுத்த பயன்படுத்தலாம். இல்லாவிட்டால், வெளிநாடு மலர் சந்தைகளில் நம் நாட்டு மலர்களுக்கான வரவேற்பு இல்லாமல், எதிர்காலத்தில் ஏற்றுமதி முற்றிலும் பாதிக்கப்படும். இதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள முன்வர வேண்டும்.  இவ்வாறு அவர் கூறினார்.


Tags : Osur , Incessant rains, insect attack, loss of exports of Hosur rose flowers,
× RELATED பாராளுமன்ற தேர்தலையொட்டி ஓசூர் பேருந்து நிலையத்தில் கூட்டம் அலைமோதல்