×

வனத்தில் ராட்சத கொசு, அட்டைப்பூச்சி தொல்லை உடுமலை- மூணார் சாலையில் உலா வரும் காட்டுயானை

உடுமலை: வனத்தில் கடிக்கும் ராட்சத கொசு தொல்லையால் வெளியேறி சாலையில் யானைக்கூட்டம் சுற்றித்திரிகிறது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. உடுமலை, அமராவதி  வனச்சரகத்திற்குபட்ட பகுதிகளில் யானை, கரடி ,மான், காட்டுமாடு, சிறுத்தை  உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. தற்போது மேற்கு  தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அவ்வப்போது தொடர் மழை பெய்து வருவதால்  வனப்பகுதிகளில் வனவிலங்குகளுக்கு தேவையான உணவு மற்றும் தண்ணீர் போதுமான  அளவு கிடைத்து வருகிறது.

தாவர உண்ணிகளான மான், யானை, காட்டுமாடு  உள்ளிட்டவற்றிற்கு செடி, கொடிகள் மட்டுமின்றி மரங்களில் பசுமையான இலைகள்  துளிர்த்துள்ளதால் அவை அடர்ந்த வனப்பகுதிகளில் உலா வருகின்றன. சீதோஷ்ண நிலை  மாற்றம் காரணமாக வனப்பகுதிகளில் அட்டைப்பூச்சி,கொசுக்கள் அதிகளவில்  உற்பத்தியாகி உள்ளன. இதனால் யானை போன்ற பெரிய விலங்குகள் கொசுக்கடி தாங்க  முடியாமல் அவ்வப்போது பசுந்தழைகளால் உடலின் பாகங்களை வருடியபடி உலா  வருகின்றன.

உடுமலை- மூணார் சாலையில் சின்னார் செக்போஸ்ட்,ஏழுமலையான் கோயில்  உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரங்களில் பருவமழை காரணமாக புற்கள் அடர்த்தியாக  வளர்ந்துள்ளன. இதன் காரணமாக அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள்  கொசுக்கள் குறைவாகவும், புற்கள் நிறைவாகவும் உள்ள சாலையோரங்களில்  முகாமிட்டு பசியாறுவதோடு, இளைப்பாறி வருகின்றன. குறிப்பாக உடுமலை-  சின்னார் செக்போஸ்ட் வழித்தடங்களில் பகல் வேளைகளிலேயே யானைகள் உலா  வருகின்றன.

இதனால் வாகன ஓட்டிகள் விழிப்புடன் வாகனங்களை குறைந்த வேகத்தில்  இயக்க வேண்டும். காட்டு யானைகளை மிரள வைக்கும் படி ஒலி எழுப்பக் கூடாது.  மேலும் அதன் அருகே சென்று செல்பி எடுக்க கூடாது என சோதனைச்சாவடிகளில்  வனத்துறையினர் வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.

Tags : Udumalai- Munnar , In the forest giant mosquito, beetle infestation, wild elephant
× RELATED உடுமலை - மூணார் சாலையில் காட்டு யானைகள் உலா; வனத்துறை எச்சரிக்கை