×

திருப்பத்தூர் மாவட்டத்தில் கற்கால மனிதர்கள் வாழ்ந்த வரலாற்று தடயங்கள் புதைந்து கிடப்பதால் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள வேண்டும்: மற்றொரு கீழடி கண்டெடுக்க வாய்ப்பு

திருப்பத்தூர்: நீண்ட நெடிய வரலாற்றுச் சிறப்பு மிக்க திருப்பத்தூரானது, ஆதியூர் முதல் கோடியூர் வரை 8 திசைகளில் 10 திருத்தலங்கள் அமைந்திருப்பதால் “திருப்பத்தூர்” என்று பெயர் வந்தது என்றும், திருப்பத்தூரைப் பல்வேறு காலகட்டங்களில் பல மன்னர்கள் ஆண்ட அக்காலத்தில் பிரம்மபுரம், திருப்பேரூர், திருவனபுரம் எனப் பல பெயர்களில் திருப்பத்தூர் அழைக்கப்பட்டது. கி.பி. 14ஆம் நூற்றாண்டில் விஜயநகர மன்னர்கள் திருவனபுரம் என்ற பெயரைத் திருப்பத்தூர் என்று மாற்றி உள்ளதாகவும் மக்களால் கூறப்படுகிறது.

இத்திருப்பத்தூரானது சங்ககாலத்தில் நன்னன்சேய் நன்னன் ஆட்சி செய்த நவிரமலை என்று கருதப்படும் ஜவ்வாது மலை மற்றும் அதன் தொடர்ச்சியாக ஏலகிரி மலை ஆகிய 2 பெரிய மலைகளால் சூழப்பட்ட பகுதி ஆகும். ஜவ்வாது மலை, இயற்கை எழில் கொஞ்சும் அருவிகள், நீரோடைகள், காடுகள் என்று, காண்போரை மெய்சிலிர்க்க வைக்கும் மலையாகும். ஜவ்வாது மலையில் இருந்து செய்யாறு, ஆரணியாறு, கமண்டல நாகநதி ஆறு, மிருகண்டா நதி ஆகிய ஆறுகள் உற்பத்தியாகின்றன. இம்மலை மிகச் சிறந்த சந்தன மரங்கள் விளையும் பூமியாகத் திகழ்ந்தது. இதனால் ஆசியாவிலேயே 2வது பெரிய சந்தனக் கிடங்கு திருப்பத்தூரில் அமைக்கப்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் பல வரலாற்று தடயங்களை தொல்லியல் துறையினர் மற்றும் வரலாற்று ஆய்வாளர்கள் கடந்த 7 ஆண்டுகளில் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளுக்குச் சென்று கள ஆய்வுகளை நிகழ்த்தி வருகின்றார். அவரது ஆய்வில் 70க்கும் மேற்பட்ட வரலாற்றுச் சான்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. தமிழர்களது முற்கால வாழ்வியலை அறிய உதவும் தொல்லியல் வரலாற்று ஆவணங்களான கற்கால ஆயுதங்கள், பாறை ஓவியங்கள், கற்திட்டைகள், கற்பதுக்கைகள், கல்வட்டங்கள், கற்குவைகள், மண்பாண்ட ஓடுகள், நடுகற்கள், கல்வெட்டுகள், செப்பேடுகள், ஓலைச்சுவடிகள் எனப் பல்வேறு தடயங்கள் இம்மாவட்டத்தில் கண்டறியப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

குறிப்பாக, திருப்பத்தூர் அடுத்த கந்திலி அருகே உள்ள கெஜல்நாயக்கன் பட்டி அருகே செல்லியம்மன் கொட்டாய் என்ற இடத்தில் 3,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட ‘பாறை ஓவியங்கள்’ கண்டறியப்பட்டுள்ளது. குண்டு ரெட்டியூர், 102 ரெட்டியூர், ஆண்டியப்பனூர் ஆகிய இடங்களில் பெருங்கற்காலத் தடயங்கள் பல அமைந்துள்ளன. ஆதியூர், அம்பலூர், உமராபாத், கல்நார்சாம் பட்டி, கீழ்க்குப்பம், கருப்பனூர், சந்திரபுரம், சல்லியூர், கொடையாஞ்சி, குரும்பேரி, மூக்கனூர், தாமலேரிமுத்தூர், மடவாளம், மரிமாணிக்குப்பம், நரியனேரி, பெருமாப்பட்டு உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பல்லவர், சோழர், நாயக்கர் காலத்தைச் சேர்ந்த நடுகற்கள், கல்வெட்டுகள் எனப் பல தடயங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

தமிழக அளவில் இதுவரை நடைபெற்ற அகழாய்வு முடிவுகள் வரலாற்றில் புதியதோர் வெளிச்சத்தைப் பாய்ச்சி வரும் இவ்வேளையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் குண்டுரெட்டியூர் என்ற சிற்றூரில் கடந்த 2017ஆம் ஆண்டில் மேற்கொண்ட வரலாற்று ஆய்வாளர்கள் மேற்பரப்புக் கள ஆய்வு செய்யப்பட்டது. குண்டுரெட்டியூரானது ஏலகிரி மலையின் பின்பக்கச் சரிவின் அடிவாரமாகும். இங்கு கி.பி. 10, 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 5 நடுகற்கள் உள்ளது. அவற்றில் 4 ஏற்கனவே ஆய்வு செய்யப்பட்டவையாகும். ஆய்வுக்கு உட்படுத்தாத ஒரு நடுகல்லை ஆய்வு செய்யச்சென்றபோது அங்குள்ள மலையடிவாரத்தில் சுமார் 80 ஏக்கர் நிலப்பரப்பில் ஏராளமான மண் பானை ஓடுகள் சிதறிக்கிடப்பதைக் கண்டறியப்பட்டது. அவற்றைச் சேகரித்துச் சுத்தம் செய்து பார்க்கையில் அவை பழமையான ஓடுகள் என்பது தெரியவந்தது.

தொடர்ந்து 8 நாட்கள் மேற்கொண்ட மேற்பரப்புக் களஆய்வின் முடிவில் பல அரிய பொருட்கள் சேகரிக்கப்பட்டன. அவை, சுடுமண் ஊதுகுழாய்கள், கருப்பு சிவப்பு மண்பானை ஓடுகள், கருமை நிறத்தில் தடிமனான சிவப்புப் பானை ஓடுகள், சிவப்பு வண்ணப்பூச்சு பானை ஓடுகள், உடைந்த கெண்டிகள், இருப்புத் தாதுக்கள், கழுத்தில் அணியும் ஆபரணம், புதிய கற்காலக் கருவிகள், எலும்புத் துண்டுகள், பெரிய சுட்ட செங்கல்லின் ஒரு பகுதி ஆகிய பொருட்கள் நிலத்தின் மேற்பரப்பில் கிடைத்தன. இவை நிலத்தில் உழவுப்பணி மேற்கொள்கையில் வெளிவந்துள்ளது. மேலும் மனிதர்கள் வாழ உகந்த சூழல் உள்ள பல கற்குகைகள் இம்மலையில் இருப்பதும் தெரியவந்தது. அவற்றில் 2 குகைகளை ஆய்வு செய்துள்ளனர். ஒன்று மலையடிவாரத்தின் நிலப்பரப்பில் உள்ள குகை. இக்குகையானது 10 பேர் வசிக்க ஏற்றவாறும், பெரிய கல்லில் உணவுப்பொருட்களை அரைத்த தடம், குகை முகப்பில் புருவ அமைப்பு செதுக்கப்பட்டு, பழமையான தமிழ் எழுத்து தோற்றம் கொண்ட குறியீடுகள் செதுக்கப்பட்டுள்ளன.

மேலும் இங்கு கிடைத்த ஒரு மண்பானை ஓட்டில் குறியீடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இக்குகையினை இப்பகுதி மக்கள் ‘கெவி கல்’ என்கின்றனர். இக்குகைக்குச் சற்றுத் தொலைவில் உள்ள ஒரு பாறையில் விளையாடுவதற்குப் பயன்படும் கட்டங்கள் கீறப்பட்டுள்ளது.பொதுவாக மனித வாழ்விடங்கள் யாவும் நீர் நிலைக்கு அருகாமையில் தான் அமைக்கப்பட்டிருக்கும் என்பதை நாம் அறிவோம். அதற்கேற்ப இக்குகையின் ஓரத்தில் ‘எகிலேரி’ என்ற மிகப்பெரிய நீர்நிலை இருப்பது இங்கு கவனத்திற்குரியதாகும்.

இந்த ஊருக்கு அருகே உள்ள ஆண்டியப்பனூர் நீர்த்தேக்கத்தின் அருகே பெருங்கற்கால மக்கள் வாழ்ந்த தடயங்கள் பல கண்டறியப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. தமிழர் வரலாற்றை எடுத்துரைக்கும் ஆய்வுகளுக்கு முன்னுரிமை அளித்து வரும் தமிழக முதல்வர் அண்மையில் செஸ் ஒலிம்பியாட் தொடக்கவிழாவில் ஆற்றிய உரையில் அகழாய்வுகளில் கண்டறியப்பட்ட ஆட்டக்காய்களைக் குறிப்பிட்டுப் பேசினார். திருப்பத்தூர் மாவட்டம் குண்டுரெட்டியூரில் மேற்பரப்புக் கள ஆய்வுகளில் ‘வட்டச்சில்லுகள்’ எனும் ஆட்டக்காய்கள் பல கண்டறியப்பட்டுள்ளன. வரலாற்று சிறப்பு வாய்ந்த இம்மாவட்டத்தில் கண்டறியப்பட்ட இடங்களில் தொல்லியல் துறையினர் கீழடியை போல அகழாராய்ச்சி மேற்கொண்டால், பல அரிய உண்மைகள் வெளிப்படும் என்று வரலாற்று ஆர்வலர்கள் ேகாரிக்கை வைத்துள்ளனர்.

சோழர்கால கல்வெட்டு, சூலக்கல் கண்டெடுப்பு
இங்குள்ள ‘பாண்டவர் குட்டை’ ‘சின்னப் பாண்டவர் குட்டை’ என்ற இடங்களில் முற்கால மக்களது நினைவுச் சின்னங்களான கற்திட்டைகள் பல காணப்படுகின்றன. மேலும் இவ்வூரில் ‘சித்திரமேழி’ நாட்டார் சபை குறித்த சோழர்காலக் கல்வெட்டும், சோழர்கால சூலக் கல்லும் கண்டறியப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. ஏலகிரி மலையின் பக்கவாட்டில் அமைந்துள்ள மற்றொரு ஊரான 102 ரெட்டியூர் என்ற இடத்தில் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த கல்வட்டம், கற்குவை போன்றவையும் ‘இரும்பு உருக்கு உலை’ இருந்த தடயமும் அந்த உலையில் காற்றைச் செலுத்தப் பயன்படுத்தப்படும் மண் குழாய்களும் கண்டறியப்பட்டுள்ளன.

இரும்பாலை இருந்ததற்கானஆதாரம்
ஏலகிரி மலையில் இருந்து வரும்  காட்டாறுகள் குண்டுரெட்டியூர்  நீர்நிலையினை வந்து சேர்கின்றன. அங்குள்ள குகைக்கு  அருகாமையில் உள்ள புதர் மண்டிய மேட்டுப்பகுதியில் இரும்பினை உருக்கும் உலை  இருந்ததற்கான உறுதியான சான்றுகள் கிடைத்துள்ளன. மொத்தமாக 7 இரும்பு  உருக்கப் பயன்படும் சுடுமண், ஊதுகுழாய்கள் கிடைத்துள்ளன. இம்மேட்டினைச்  சுற்றிலும் இரும்புத் தாதுக்கள் குவிந்துள்ளன. மலையடிவாரத்தில் 10 புதிய  கற்காலக் கருவிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் 4 குத்துக்கற்கள், 5 அரவைக் கற்கள், 1 கற்கோடாரி. இப்பொருட்கள் கல்லூரி நூலகத்தில் மாணவர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.


Tags : Tirupattur district , Historical traces of Neolithic man's life, excavations, are another underpinning
× RELATED மண்டைய உடைக்குறாங்க… மரியாதை கொடுக்க...