மெல்போர்ன்: ஆஸ்திரேலியா-தென்ஆப்ரிக்கா இடையே 2வதுடெஸ்ட் மெல்போர்னில் நடந்து வருகிறது. பாக்சிங்டே டெஸ்ட்டான இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்ரிக்கா முதல் இன்னிங்சில் 189 ரன்னில் சுருண்டது. ஆஸி.பவுலிங்கில் கேமரூன் கிரீன் 5 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணியில், 2வது நாளான நேற்று வார்னர் இரட்டை சதம் விளாசினார். 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் அவர் இரட்டை சதம் விளாசிய 2வது வீரர் என்ற சாதனையை படைத்தார். இரட்டை சதம் விளாசியதும் தசைப்பிடிப்பு காரணமாக அவர் ‘ரிட்டயர்ஹர்ட்’ ஆகி வெளியேறினார். ஸ்டீவன் சுமித் 85 ரன்னில் அவுட் ஆனார். நேற்றைய 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 91 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 386ரன் எடுத்திருந்தது.
3வதுநாளான இன்று அரைசதம் அடித்த டிராவிட் ஹெட் 51 ரன்னில் ஆட்டம் இழந்தார். அடுத்து மீண்டும் களம் இறங்கிய டேவிட் வார்னர், அன்ரிச் நோர்டியா வீசிய முதல் பந்திலேயே நேற்றைய 200 ரன்னுடன் அவுட் ஆனார். பின்னர் வந்த கேப்டன் கம்மின்ஸ் 4, நாதன் லயன் 25 ரன்னில் வெளியேறினர். உணவு இடைவேளையின் போது ஆஸி. 7 விக்கெட் இழப்பிற்கு 479 ரன் எடுத்திருந்தது.
பின்னர் ஆட்டம் தொடங்கியதும் அலெக்ஸ் கேரி சதம் விளாசினார். அவர் 111 ரன் எடுத்து அவுட் ஆனார். 142.5 ஓவரில் ஆஸி. 8 விக்கெட் இழப்பிற்கு 564 ரன் எடுத்திருந்தது. கேமரூன் கிரீன் 50, ஸ்டார்க் ரன் எதுவும் இன்றி களத்தில் இருந்தனர். இன்று காலை 9.30 மணி அளவில் தென்ஆப்ரிக்காவை விட 375 ரன் முன்னிலை பெற்று வலுவாக இருந்தது.