×

பொங்கல் பரிசுத்தொகுப்பில் ரூ.1000 பணம், பச்சரிசி மற்றும் சர்க்கரையுடன் கரும்பும் வழங்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: ரேஷனில் பொங்கல் பரிசுத் தொகுப்பில் முழுக்கரும்பையும் சேர்த்து தர தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். விவசாயிகள் கோரிக்கையை ஏற்று பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பையும் சேர்த்து தர முதல்வர்வலியுறுத்தினார். 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சக்கரை, ஆயிரம் ரூபாய் ரொக்கத்துடன் முழுக்கரும்பையும் வழங்க முதல்வர் உத்தரவிட்டார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட பொங்கல் பரிசுத் தொகுப்புடன் கரும்பினையும் சேர்த்து வழங்கிட விவசாயிகளிடமிருந்து கோரிக்கைகள் வரப்பெற்றது குறித்து, இன்று (28-12-2022) தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று, ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 1 கிலோ பச்சரிசி,1 கிலோ சர்க்கரை மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கத்துடன், முழுக் கரும்பு ஒன்றினையும் சேர்த்து, அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் வழங்கிட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்கள். இதனடிப்படையில், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்வினை 2-1-2023-க்கு பதிலாக 9-1-2023 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைப்பார்கள்.  

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன் கொடுக்கும் பணி 3-1-2023 முதல் 8-1-2023 வரை நடைபெறும்.  இந்தக் கூட்டத்தில், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், இ.ஆ.ப., கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மருத்துவர் ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறைச் செயலாளர் சி. சமயமூர்த்தி, இ.ஆ.ப., மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : CM ,G.K. Stalin , Pongal prize package, Chief Minister M.K.Stalin, black will be presented
× RELATED குமரி மாவட்டத்தில் கடந்த 24 மணி...