×

குடும்பத்துடன் மைசூரு சுற்றுலா வந்த மோடியின் சகோதரர் கார் விபத்தில் காயம்

மைசூரு: கர்நாடக மாநிலம் மைசூரில் பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பிரகலாத் தாமோதர் தாஸ் மோடி மற்றும் அவரது குடும்பத்தினர் சென்ற கார் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மோடியின் சகோதரர் உள்பட 5 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. கர்நாடக மாநிலம் மைசூருவுக்கு பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பிரகலாத் மோடி மற்றும் அவரது குடும்பத்தினர் சுற்றுலா வந்தனர். மைசூரு வழியாக பண்டிபுராவுக்கு  மெர்சிடிஸ் பென்ஸ் காரில் சென்று கொண்டிருந்தனர். காரில் மோடியின் சகோதரர் பிரகலாத் மோடி (70), அவரது மகன் மெகுல் பிரகலாத் மோடி (40), மருமகள் ஜிண்டால் மோடி (35), பேரன் மீனத் மெகுல் மோடி (6) ஆகியோர் பயணம் செய்தனர்.

காரை டிரைவர் சத்தியநாராயண் ஓட்டி சென்றார். கடகோலா அருகே சென்று கொண்டிருந்த போது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணித்த அனைவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. விபத்து குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஜேஎஸ்எஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கிடையே சம்பவம் நடந்த இடத்தை மைசூரு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீமா மற்றும் உயர் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இது தொடர்பாக மைசூரு தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

* உயிரை காப்பாற்றிய ஏர்பேக்
பிரதமர் மோடியின் குடும்பத்தினர் சென்ற கார் ​சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவரில் மோதியது. இதில் அதிர்ஷ்டவசமாக காரின் ஏர்பேக்கள் திறந்ததால் அனைவரும் ஆபத்தில் இருந்து காப்பாற்றப்பட்டதாக தெரிய வந்துள்ளது. இந்த விபத்தில் காரின் முன்பகுதி முற்றிலும் சேதமடைந்தது.

Tags : Modi ,Mysore , Modi's brother was injured in a car accident while visiting Mysore with his family
× RELATED நம் நாட்டின் பன்முகத்தன்மை குறித்து...