×

புதுவண்ணாரப்பேட்டையில் பரபரப்பு ‘குடித்தது ரூ.150க்கு ஐயா... அபராதம் ரூ.20 ஆயிரமா...’போலீசாருடன் இளைஞர்கள் வாக்குவாதம்

தண்டையார்பேட்டை: புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் மது குடித்துவிட்டு வந்த இருசக்கர வாகன ஓட்டிகள் போலீசாரிடம் சிக்கினர். போலீசார் அபராத தொகை கட்டச்சொன்னதும், ‘‘ஐயா குடித்தது ரூ.150க்குத்தான்... அபராதம் ரூ.20 ஆயிரமா?’’ என கேட்டு இளைஞர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்த இளைஞர்கள் திருவொற்றியூர் பகுதிக்கு நண்பர்களுடன் இரு சக்கர வாகனத்தில் சென்று விட்டு மது அருந்தி விட்டு புதுவண்ணாரப்பேட்டை அருகே வீட்டிற்கு செல்வதற்காக வந்து கொண்டிருந்தனர். அப்போது, இரு சக்கர வாகனத்தை மடக்கிய போலீசார், வாகனத்தை ஓட்டி வந்த இளைஞர்கள் மது அருந்தி இருந்ததால் அபராதம் விதித்தனர்.

போலீசார் அபராத தொகையாக ரூ.20 ஆயிரம் செலுத்த வேண்டும் என்றதும் அதைக்கேட்டு கடும் அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்தனர். பின்னர், ஐயா... நாங்கள் சரக்கு அடித்ததே 150 ரூபாய்க்குதான். ஆனால் அபராதமோ ரூ.20,000 என்றால் எங்களால் எப்படி பணத்தை செலுத்த முடியும். அடிக்கடி இதுபோன்று அபராதம் விதித்துக்கொண்டே இருந்தால் நாங்கள் என்னதான் செய்ய முடியும் என்று போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அங்கு பொதுமக்கள் கூட்டம் கூடவே உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வாக்குவாதம் மற்றும் ரகளையில் ஈடுபட்டிருந்த இளைஞர்களை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். பிறகு குடிபோதையில் இருந்த அவர்களிடம் எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பி வைத்தனர். திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் இளைஞர்கள் குடிபோதையில் போலீசாருடன் ரகளையில் ஈடுபட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Bustle ,Puduvannarappet , Bustle in Puduvannarpettai 'Drinking for Rs. 150 sir... fine is Rs. 20 thousand...' Youths argue with the police
× RELATED அரசு பஸ் கவிழ்ந்து 18 பயணிகள் படுகாயம்; வந்தவாசி அருகே பரபரப்பு