×

100வது டெஸ்டில் இரட்டை சதம் வார்னர் அபார சாதனை: ஆஸி. வலுவான முன்னிலை

மெல்போர்ன்: தென் ஆப்ரிக்க அணியுடனான 2வது டெஸ்டில், தொடக்க வீரர் டேவிட் வார்னரின் அபார ஆட்டத்தால் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் வலுவான முன்னிலை பெற்றது. மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாஸ் வென்ற ஆஸி.  முதலில் பந்துவீச... தென் ஆப்ரிக்கா முதல் இன்ன்இங்சில் 189 ரன்னுக்கு சுருண்டது (68.4 ஓவர்). கைல் வெர்ரைன் 52, மார்கோ ஜான்சென் 59, கேப்டன் டீன் எல்கர் 26 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து அணிவகுத்தனர். ஆஸி. பந்துவீச்சில் கேமரான் கிரீன் 5, ஸ்டார்க் 2, போலண்ட், லயன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸி. முதல் நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 45 ரன் எடுத்திருந்தது.  

வார்னர் 32 ரன், லாபுஷேன் 5 ரன்னுடன் நேற்று 2ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். லாபுஷேன் 14 ரன் எடுத்த நிலையில், ரன் அவுட்டாகி ஏமாற்றத்துடன் வெளியேறினார். அடுத்து வார்னருடன் ஸ்டீவன் ஸ்மித் இணைந்தார். அபாரமாக விளையாடிய இருவரும் தென் ஆப்ரிக்க பந்துவீச்சை சிதறடித்து ஆஸி. ஸ்கோரை உயர்த்தினர். 100வது டெஸ்டில் விளையாடும் வார்னர் 144 பந்தில் சதம் விளாசி அசத்தினார். மறு முனையில் ஸ்மித் 108 பந்தில் அரை சதம் அடித்தார். இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 239 ரன் சேர்த்து அசத்தியது.  ஸ்மித் 85 ரன் விளாசி அன்ரிச் பந்துவீச்சில் டி புருய்ன் வசம் பிடிபட்டார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய வார்னர், 100வது டெஸ்டில் இரட்டை சதம் விளாசும் சாதனையையும் நிகழ்த்தி அசத்தினார்.

மெல்போர்னில் நேற்று கடுமையான வெயில் கொளுத்திய நிலையில், மிகவும் சோர்வடைந்த வார்னர் ‘ரிட்டயர்டு ஹர்ட்’ முறையில் பெவிலியன் திரும்பினார் (200 ரன், 254 பந்து, 16 பவுண்டரி, 2 சிக்சர்). அன்ரிச் வீசிய 85வது ஓவரின் 4வது பந்தை எதிர்கொண்ட கேமரான் கிரீன் வலது சுட்டு விரலில் காயம் ஏற்பட்டு ரத்தம் சொட்டியதால் அவரும் ‘ரிட்டயர்டு ஹர்ட்’ ஆகி வெளியேறினார். 2ம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 3 விக்கெட் இழப்புக்கு 386 ரன் குவித்துள்ளது (91 ஓவர்). டிராவிஸ் ஹெட் 48 ரன், அலெக்ஸ் கேரி 9 ரன்னுடன் களத்தில் உள்ளனர்.


Tags : Warner ,Aussies , Warner double century in 100th Test: Aussies A strong presence
× RELATED ஆஸிக்கு 279 ரன் இலக்கு: 4 விக்கெட் இழந்து திணறல்