×

5 தலைமுறையாக நீடித்த தீண்டாமை கொடுமைக்கு முடிவு: பட்டியலின மக்களை கோயிலுக்குள் அழைத்துச் சென்ற ஆட்சியர்..!

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் 5 தலைமுறைகளாக கோயிலுக்குள் நுழைய மறுக்கப்பட்ட பட்டியலின மக்களை மாவட்ட ஆட்சியர் கோயிலுக்குள் அழைத்து சென்று சாமி தரிசனம் செய்ய வைத்தார். புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் கிராமம் அருகே வேங்கைவயல் பகுதியில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக அடையாளம் தெரியாத நபர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். தொடர்ந்து சம்பவம் நடந்த வேங்கைவயல் பகுதியில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு மற்றும் காவல் கண்காணிப்பாளரும் ஆய்வு செய்தனர்.

அப்போது ஆட்சியரிடம் பேசிய பட்டியலின மக்கள் தங்களை 5 தலைமுறைகளாக அய்யனார் கோயிலுக்குள் சென்று வழிபட அனுமதி மறுத்து ஒதுக்கியுள்ளதாக வேதனை தெரிவித்தனர். இதனையடுத்து உடனடியாக அவர்களை அழைத்துக் கொண்டு சம்மந்தப்பட்ட கோயிலுக்கு சென்று வழிபாடு செய்ய நடவடிக்கை மேற்கொண்டார். முன்னதாக கோயில் பூசாரியான மாற்று சமூகத்தை சேர்ந்த ராஜன் என்பவரின் மனைவி சாமி வந்ததை போல ஆடி ஆதிதிராவிட மக்களை இழிவான சொற்களை பயன்படுத்தி பேசியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஆட்சியர் அந்த பெண் மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து கோயில் பூசாரியின் மனைவி சிங்கம்மாள் மீது SC/ST வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே ஊரைச் சேர்ந்த அஞ்சப்பன் என்பவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள டீக்கடையில் இரட்டை குவளை முறையை கடைபிடித்த கடை உரிமையாளர் மூக்கையா மற்றும் மனைவி மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிங்கம்மாள், மூக்கையா இருவரையும் போலீசார் கைது செய்தனர்.


Tags : End of 5 generations of untouchability cruelty: The collector who took the Scheduled Caste people into the temple..!
× RELATED அரசு பள்ளிகளில் பிளஸ் 2 வரை படித்து...