×

ராணிப்பேட்டையில் இன்று மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள்: அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட சமூக பாதுகாப்பு துறையின் கீழ் இயங்கும் சிறுவர் மற்றும் சிறுமியர் இல்ல குழந்தைகளுக்கு மண்டல அளவிலான விளையாட்டு மற்றும் கலை நிகழ்ச்சிகள் இன்று காலை காரை கூட்ரோட்டில் உள்ள அரசினர் சிறுவர் குழந்தைகள் இல்லத்தில் நடைபெற்றது. கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமை தாங்கினார். தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றிவைத்து மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் ஒலிம்பிக் தீபம் ஏற்றிவைத்து விளையாட்டு போட்டிகளை தொடங்கிவைத்தார்.

இதில் அமைச்சர் ஆர்.காந்தி பேசியதாவது: தமிழகத்தில் 11 அரசினர் குழந்தைகள் இல்ல மாணவ, மாணவிகள் மற்றும் 14 அரசு சாரா குழந்தைகள் இல்ல மாணவ, மாணவிகள் என 28 குழந்தைகள் இல்ல மாணவர்கள் விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். விளையாட்டில் வெற்றி முக்கியமில்லை. முயற்சிதான் மிக முக்கியம். முயற்சி இருந்தால் வெற்றி நிச்சயம். மாணவ, மாணவிகள் இந்த விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்று பரிசுகளை பெற வாழ்த்துகிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.

இன்றும் நாளையும் நடக்கும் இப்போட்டிகளில் ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, சேலம், திருப்பத்தூர், தருமபுரி, கோவை, நீலகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் உள்ள 28 அரசினர் குழந்தைகள் இல்லங்களை சேர்ந்த 635 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர். வாலிபால், ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகள் நடக்கின்றன.

Tags : Ranipet ,Minister ,R.R. Gandhi , Minister R. Gandhi inaugurated the zonal sports competitions today in Ranipet
× RELATED வேலூர், ராணிப்பேட்டை மாவட்ட...