கர்நாடகாவில் பரபரப்பு: பார்சலில் வந்த மிக்சி வெடித்ததில் உரிமையாளரின் கை சிதைந்தது..காவல்துறை விசாரணை..!!

கர்நாடகா: கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் கூரியர் மையத்திற்கு அனுப்பப்பட்ட பார்சல் மிக்சி பயங்கரமாக வெடித்து சிதறியதில் மையத்தின் உரிமையாளரின் கை சிதைந்தது இந்த சம்பவம் தீவிரவாத தாக்குதலா என்ற சந்தேகத்தை கிளப்பியுள்ளது. ஹாசன் நகரை அடுத்த கே.ஆர்.புரத்தில் சசி என்பவர் கூரியர் மையத்தை நடத்திவருகிறார். நேற்று இரவு இவர் வழக்கம் போல் மையத்தில்  பணியில் இருந்தார். அப்போது திடீரென பலத்த சத்தத்துடன் வெடி சத்தம் கேட்டது. சத்தம்கேட்டு அரண்டுபோன அக்கம்பக்கத்தினர் கூரியர் மையத்திற்கு சென்று பார்த்தனர் அங்கு சசி பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

சசியின் வயிற்றிலும், முகத்திலும் மிக்சியின் உடைந்த பாகங்கள் ஆழமாக குத்தி கிழித்திருந்தன. அவரது வலதுகையின் மணிக்கட்டு பகுதி மற்றும் விரல்கள் முற்றிலும் சிதைந்து ரத்தம் கொட்டியது. அவர்கள் சசியை உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். கூரியர் மையத்தின் உரிமையாளர் சசியின் வயிறு, மார்பு பகுதிகளிலிருந்து மிக்சியின் உடைந்த பாகங்கள் அகற்றப்பட்டுள்ளன. சசியிடம் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பார்சலில் அனுப்பப்பட்ட மிக்சி ஒன்று திடீரென வெடித்து சிதறியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது வெடிகுண்டு அல்ல என்றும் வதந்திகளை யாரும் நம்பவேண்டாம் என்றும் போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

கூரியர் மையத்தில் வெடித்தது வெடிகுண்டுதானா என்பதை கண்டறிய மைசூர் நகரிலிருந்து வரவழைக்கப்பட்ட தடயவியல் நிபுணர்கள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மிக்சி வெடிக்க காரணம் என்ன என்பது குறித்தும் இதனை பார்சலில் அனுப்பியது யார் என்பதை குறித்தும் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். கடந்த நவம்பர் 10ஆம் தேதி மங்களூர் அடுத்த நாகுரி என்ற இடத்தில் குக்கர் குண்டு வெடித்ததில் ஆட்டோ ஓட்டுனரும் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய ஷார்க் என்ற இளைஞரும் படுகாயமடைந்தனர். அதே போன்று தாக்குதல் நடத்த திட்டம் திட்டப்பட்டதா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

Related Stories: