கடலில் பால் ஊற்றி பொதுமக்கள் கண்ணீர் சுனாமி நினைவு தினம் கடலூரில் அனுசரிப்பு

கடலூர் : கடலூரில் 18ம் ஆண்டு சுனாமி நினைவு தினத்தையொட்டி கடலூர் கடலில் பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ம் தேதி இந்தோனேஷியாவில் உள்ள சுமத்ரா தீவில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் எழுந்த சுனாமி பேரலைகள் தமிழக கடற்கரையை தாக்கி, ஆயிரக்கணக்கானவர்களை பலிவாங்கியது.

கடலூர் மாவட்டத்தில் மட்டும் சுனாமி பேரலையில் சிக்கி 610 பேர் பலியாகினர். சுனாமி பேரலையால் பலியானவர்களின் 18ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி கடலூர் தேவனாம்பட்டினம் வெள்ளி கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவுச் சின்னத்தில் திமுகவினர் அஞ்சலி செலுத்தினர்.

 மேலும் பொதுமக்கள் ஊர்வலமாக சென்று கடற்கரையில் அஞ்சலி செலுத்தினர். அப்போது பெண்கள் கடலில் பால் ஊற்றியும், மலர்தூவியும், துக்கம் தாங்காமல் கதறி அழுதனர். கடற்கரை மணலில் மெழுகு வர்த்தி ஏற்றியும், இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். சுனாமியால் இறந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கடலூர் மாவட்ட மீனவர்கள் யாரும் நேற்று மீன்பிடி தொழிலுக்கு செல்லவில்லை.  இதனால் திருப்பாதிரிப்புலியூர், மஞ்சக்குப்பம், முதுநகர், கிஞ்சம்பேட்டை ஆகிய இடங்களில் மீன்மார்க்கெட்டுகள் அடைக்கப்பட்டு இருந்தன.

எப்போதும் பரபரப்பாக காணப்படும் கடலூர் மீன்பிடி துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டது.

பிச்சாவரத்தில் சுனாமி நினைவஞ்சலி:  புவனகிரி: கடந்த 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியால் சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம், எம்ஜிஆர் திட்டு, பில்லுமேடு, பட்டறையடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அவர்களது நினைவாக நேற்று 18ம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. பில்லுமேடு கிராமத்தில் இறந்தவர்கள் நினைவாக வைக்கப்பட்டிருந்த புகைப்படங்கள் மற்றும் நினைவு ஸ்தூபிக்கு மெழுகுவர்த்தி ஏற்றி, மலரஞ்சலி செலுத்தப்பட்டது. சின்னவாய்க்கால் கிராமத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக நினைவு ஸ்தூபி அருகில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Related Stories: