×

தாளவாடி மலைப்பகுதியில் கரும்பு தோட்டத்திற்குள் புகுந்த சிறுத்தை வனப்பகுதிக்கு விரட்டியடிப்பு-பிரத்யேக உடை, துப்பாக்கியுடன் களமிறங்கிய ஊழியர்கள்

சத்தியமங்கலம் :  தாளவாடி மலைப்பகுதியில் கரும்பு தோட்டத்திற்குள்  புகுந்த சிறுத்தையை பிரத்யேக உடை அணிந்தும், துப்பாக்கியுடனும் களம் இறங்கிய வனத்துறை ஊழியர்கள் வனப்பகுதிக்குள் சிறுத்தையை விரட்டியடித்தனர். ஈரோடு  மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் புலி, சிறுத்தை,  யானை, கரடி, மான், காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள்  அதிகம் உள்ளன.

யானை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் இரவு நேரத்தில்  வனப்பகுதியை விட்டு வெளியேறி அருகில் உள்ள கிராமங்களில் புகுந்து  விவசாயிகள் பயிரிட்டுள்ள பயிர்களை சேதப்படுத்துவதும், ஆடு, மாடு உள்ளிட்ட  கால்நடைகளை வேட்டையாடுவதும் தொடர்கதையாக உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள்  வீட்டை விட்டும், தோட்டங்களை விட்டும் வெளியே வரவே முடியாமல் பெரிதும்  அச்சமடைந்தனர்.

இந்நிலையில் தாளவாடி மலைப்பகுதி மல்குத்திபுரம்  கிராமத்தில் விவசாயி குருசாமி என்பவருக்கு சொந்தமான கரும்பு  தோட்டத்திற்குள் நேற்று காலை சிறுத்தை நடமாடுவதாக தாளவாடி  வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆசனூர் மாவட்ட வன அலுவலர்  தேவேந்திரகுமார் மீனா அறிவுரையின் பேரில் தாளவாடி வனச்சரகர் சதீஷ்  தலைமையில் வனத்துறை ஊழியர்கள் குருசாமியின் கரும்பு தோட்டத்தில்  முகாமிட்டனர்.

அப்போது, வனத்துறை ஊழியர்களின் பாதுகாப்புக்காக  பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட உடையை அணிந்தபடி கரும்பு தோட்டத்தில் பதுங்கி  இருந்த சிறுத்தையை விரட்டும் பணியில் துணிச்சலாக களம் இறங்கினர்.  இதைத்தொடர்ந்து, துப்பாக்கியுடன் கண்காணிப்பு பணி மேற்கொண்டு அங்கு பதுங்கி  இருந்த சிறுத்தையை அடர்ந்த வனப்பகுதிக்கு வனத்துறை ஊழியர்கள் விரட்டி  அடித்தனர். இதனால் விவசாயிகள் சற்று நிம்மதியடைந்தனர்.

இந்நிலையில்,  விவசாய தோட்ட பகுதிகளில் அடிக்கடி சிறுத்தை நடமாடுவதாகவும், கரும்பு  தோட்டத்தில் பதுங்கிய சிறுத்தை அடிக்கடி இப்பகுதியில் நடமாடுவதால்  வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் எனவும் அப்பகுதி விவசாயிகள்  மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதைத்தொடர்ந்து வனத்துறை  உயரதிகாரிகளிடம் அனுமதி பெற்று, கூண்டு வைத்து, சிறுத்தையை பிடிக்க  நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் உறுதி அளித்தனர்.  கரும்பு தோட்டத்துக்குள் சிறுத்தை உலா வரும் சம்பவம்  அப்பகுதியினரிடையே பீதியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


Tags : Talavadi hills , Sathyamangalam: A leopard dressed in a special outfit and armed with a gun entered the sugarcane plantation in Thalavadi hills.
× RELATED தாளவாடி மலைப்பகுதியில் ஊருக்குள் புகுந்த புள்ளி மான்