திருவனந்தபுரம்: கேரளாவில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ரூ.230 கோடி மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.கேரளாவில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, பண்டிகைக்கு முன்பாக 3 நாட்கள் மது விற்பனை அதிகரித்தது. அம்மாநில அரசின் பெவ்கோ நிறுவனம் மூலம் 3 நாட்களில் ரூ.229.80 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதே காலகட்டத்தில் முந்தைய ஆண்டில் ரூ.215.49 கோடி மது விற்பனை நடந்தது.
மேலும், கிறிஸ்துமஸ் நாளான்று இம்முறை ரூ.89.52 கோடிக்கு மது விற்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ரூ.90.03 கோடி மது விற்பனை செய்யப்பட்டதாக பெவ்கோ அதிகாரிகள் கூறி உள்ளனர். அதிகபட்சமாக கொல்லமின் ஆசிரமம் விற்பனை மையத்தில் ரூ.68.48 லட்சத்திற்கு மது விற்கப்பட்டுள்ளது. கேரள அரசின் மது விற்பனை கழகமான பெவ்கோ சார்பில் 267 மதுக்கடைகள் மாநிலம் முழுவதும் செயல்பட்டு வருகின்றன. இன்னும் கூடுதலாக 175 கடைகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
