சண்டிகர்: அரசு ஆவணங்களில் குறிப்பிட்ட சமூகத்தினரைக் குறிக்கும் வார்த்தைகளைப் பயன்படுத்தக் கூடாது என அரியானா பாஜக அரசு உத்தரவிட்டுள்ளது. தாழ்த்தப்பட்ட மக்களைக் குறிப்பதற்காக மகாத்மா காந்தியால் அறிமுகப்படுத்தப்பட்ட ‘ஹரிஜன்’ என்ற வார்த்தைக்கும், மலைவாழ் மக்களைக் குறிக்கும் ‘கிரிஜன்’ என்ற வார்த்தைக்கும் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்த வார்த்தைகள் சமூகத்தினரை இழிவுபடுத்துவதாக அமைந்திருப்பதாகக் கூறி, உச்ச நீதிமன்றமும் பல்வேறு வழக்குகளில் கண்டனம் தெரிவித்திருந்தது.
இதைத் தொடர்ந்து, கடந்த 1982ம் ஆண்டு மற்றும் 2018ம் ஆண்டுகளில் ஒன்றிய அரசு வெளியிட்ட அறிவிப்பில், சாதிச் சான்றிதழ்கள் மற்றும் அரசு அலுவல் ரீதியான பணிகளில் இந்த வார்த்தைகளைப் பயன்படுத்துவதைக் கைவிட வேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில், அரியானா மாநிலத்தில் பாஜக முதல்வர் நயாப் சிங் சைனி தலைமையில் நேற்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மாநில அரசுத் துறைகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் இனிமேல் ‘ஹரிஜன்’ மற்றும் ‘கிரிஜன்’ ஆகிய வார்த்தைகளை முழுமையாகத் தடை செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட ‘பட்டியல் சாதியினர்’ மற்றும் ‘பட்டியல் பழங்குடியினர்’ என்ற வார்த்தைகளை மட்டுமே அனைத்து அதிகாரப்பூர்வ ஆவணங்களிலும் கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்றும், இதனை மீறினால் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
