×

2023ம் ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர்; ஜனவரி 9ம் தேதி பேரவை தொடங்குகிறது: முதல் நாளில் கவர்னர் உரையாற்றுகிறார், சபாநாயகர் அப்பாவு தகவல்

சென்னை: 2023ம் ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவை முதல் கூட்டத்தொடர் வரும் ஜனவரி 9ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு தெரித்துள்ளார். 2023ம் ஆண்டிற்கான தமிழக சட்டப்பேரவை முதல் கூட்டத்தொடரை பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக நடத்த தமிழக அரசு திட்டமிட்டிருந்தது. அந்த வகையில் சட்டப்பேரவை கூட்டத்தொடரின் முதல் கூட்டம் வரும் ஜன.9ம் தேதி நடைபெறும் என சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டுள்ளார். ஆளுநர் ஆர்.என்.ரவி முதல் நாளில் உரை நிகழ்த்தவுள்ளார். .
 
ஆளுநர், தமிழக  அரசின் நலத் திட்டங்கள் குறித்தும், எதிர்வரும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படப்  போகும் திட்டங்கள் பற்றியும் உரையாற்றக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதேபோல், பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம், இந்தி திணிப்புக்கு  எதிர்ப்பு, நீட் தேர்வு விலக்கு சம்பந்தமாக ஒன்றிய அரசை வலியுறுத்தும்  வகையில் விவாதங்கள் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. இதன் பின்னர், பேரவைக்கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவெடுக்கப்படும். மேலும், இந்தக் கூட்டத் தொடரில் ஆளுநர்  உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் பேச உள்ளனர். இந்த விவாதத்துக்கு அரசின் சார்பில் பதில் அளிக்கப்பட்டு, பின்னர் கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்படும்.
 
இந்தக் கூட்டத் தொடரைத் தொடர்ந்து, மார்ச் முதல் வாரத்தில் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து தலைமைச்செயலகத்தில் நிருபர்களிடம் சபாநாயகர் அப்பாவு கூறியதாவது:  இந்திய அரசியலமைப்பு சட்டம் 174(1)படி, 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் 9ம் தேதி காலை 10 மணிக்கு தலைமைச்செயலகத்தில் அமைந்துள்ள சட்டப்பேரவையில் தமிழக ஆளுநர் உரை நிகழ்த்த இசைவு தெரிவித்துள்ளார். அன்றைய தினமே அலுவல் ஆய்வுக்குழு கூடுகிறது. அதன் மூலம் கூட்டத்தை எத்தனை நாட்களுக்கு நடத்தலாம் என முடிவெடுக்கப்படும்.  தமிழகத்தை பொறுத்தவரை சுகாதாரத்துறை தரப்பில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகக்கவசம் அணிவது அவசியம் என கூறப்பட்டுள்ளது.

அதன்படி, சட்டமன்ற உறுப்பினர்கள் முக கவசம் அணிந்து சட்டப்பேரவைக்கு வரவேண்டும். கொரோனா பரிசோதனை நடத்த வேண்டிய அவசியம் இல்லை.  தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி நிகழ்த்தும் உரையை தொடர் நேரலை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.  ஓபிஎஸ், இபிஎஸ் இருக்கை விவகாரத்தில் ஏற்கனவே அவர்களிடம் தெளிவாக தெரிவித்துவிட்டோம்.   குறிப்புரைகளின்படி, சட்டமன்றத்திலும் செயல்பட வேண்டும். தற்போது வரை ஓபிஎஸ் எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவியில் நீடித்து வருகிறார். கட்சி ரீதியாக பிரச்னை இருந்தால் அதனை  அவர்களுக்குள்ளேயே பேசி முடித்துக்கொள்ளவேண்டும்.  

புதிய அமைச்சராக பொறுப்பேற்றுள்ள விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சட்டமன்ற மரபுபடி தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவிற்கும், சட்டத்துறை அமைச்சர் ரகுபதிக்கும் இடையே இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. கூட்டுறவுத்துறை சங்க பதவி தொடர்பான சட்ட திருத்த மசோதா திரும்ப பெறப்பட்டுள்ளது. ஆளுநரின் ஒப்புதல் பெறாமல் இருந்தநிலையில் முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூடி முடிவெடுத்து கூட்டுறவுத்துறை சங்க பதவிக்கால ஆயுள் எவ்வளவு நாள் உள்ளதோ அது வரை இருக்கட்டும் என கூறப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

* இந்தாண்டு நடந்த சட்டப்பேரவைகூட்டத்தொடர்கள்
தமிழக சட்டப்பேரவை கடந்த ஜன.5 தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. மேலும், நிதிநிலை அறிக்கை தாக்கல், மானிய கோரிக்கை உள்ளிட்டவை நடைபெற்றது. நீட் தேர்வுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பிய நிலையில் மீண்டும் சிறப்பு கூட்டத்தொடர் பிப்.8ம் தேதி கூட்டப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த அக்டோபர் மாதம் 17 முதல் 19ம் தேதி வரை நடைபெற்றது. இந்த கூட்டத்தொடரில் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை, அருணா ஜெகதீசன் அறிக்கை, ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிரான மசோதாக்கள் கொண்டு வரப்பட்டன.

Tags : Governor ,Speaker ,Appavu , First session for 2023; Assembly begins on January 9: Governor addresses on first day, Speaker Appavu informs
× RELATED ஆளுநர் மீது பாலியல் புகார் எதிரொலி;...