×

தை பொங்கலை முன்னிட்டு சாமியார்புதூரில் பொங்கல் பானைகள் தயாரிப்பு தீவிரம்

ஒட்டன்சத்திரம்: வரும் ஜனவரி 15ல் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் தினத்தன்று புது மண்பானையில் பொங்கலிடுவது வழக்கம். பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், விருப்பாட்சி ஊராட்சிக்குட்பட்ட  சாமியார்புதூரில் பொங்கல் பானைகள் தயாரிப்பில் 15க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். நீர்நிலைகளில் எடுக்கப்பட்ட களிமண் மற்றும் வண்டல் மண்னை பிசைந்து ஒரு நாட்களுக்கு முன்பு ஊற வைக்கப்படுகிறது. தொடர்ந்து இந்த பிசைந்த மண் மூலம் பல்வேறு அளவுகளில் பொங்கல் பானைகளை தயாரித்து அடிப்பகுதியை இணைத்து காய வைக்கின்றனர்.

பின்னர் நெருப்பு சூலையில் வைத்து பானைகளை சுட்டபின், அவற்றுக்கு பல்வேறு வண்ணங்களை பூசி விற்பனைக்கு அனுப்புகின்றனர்.  இது குறித்து பானைகள் தயாரிக்கும் தொழிலாளர்கள் கூறுகையில், ‘‘இப்பகுதியில் 50 ஆண்டுகளாக பொங்கல் பானை, கார்த்திகை விளக்கு, தண்ணீர் பானை, குழம்புச்சட்டி உள்ளிட்ட மண்பாண்டங்களை தயாரித்து வருகிறோம். மண்பாண்ட பொருட்களை பயன்படுத்துவதால் மனிதர்களுக்கு எந்த தீங்கும் ஏற்படாது. சுற்றுச்சூழலுக்கும் எவ்வித மாசும் ஏற்படாது. இங்கு தயாரிக்கப்படும் பொங்கல் பானைகளை கொள்முதல் செய்யும் மொத்த வியாபாரிகள், மதுரை, தேனி, கோவை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கின்றனர்’’ என்றனர். 


Tags : Samiarpur ,Tai Pongala , Preparation of Pongal pots is intense in Samiyarputhur ahead of Tai Pongal
× RELATED தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு இயல்பைவிட...