×

போதை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு சீல்-பந்தலூர் விழிப்புணர்வு கூட்டத்தில் போலீசார் எச்சரிக்கை

மஞ்சூர் :  தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என விழிப்புணர்வு கூட்டத்தில் போலீசார் தெரிவித்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் போதை பொருட்கள் நடமாட்டத்தை முற்றிலுமாக ஒழிக்க மாவட்ட எஸ்பி ஆசிஸ் ராவத் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து  வருகிறார்கள்.
மாவட்டம் முழுவதும் சோதனையில் ஈடுபட்டு வருவதுடன் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்துபவர்களை கைது செய்து வருகின்றனர். மேலும் இது தொடர்பாக பொதுமக்கள், மாணவ, மாணவிகள் இடையே விழிப்புணர்களையும் ஏற்படுத்தி வருகிறார்கள்.

இதன் ஒரு பகுதியாக மஞ்சூர் காவல் நிலையத்தின் சார்பில் வியாபாரிகள், தனியார் வாகன ஓட்டுனர்கள் மத்தியில் ‘போதை பொருள் எனக்கு வேண்டாம்’ என்ற தலைப்பில் விழிப்புணர்வு கூட்டம் மஞ்சூர் எச்.கே.டிரஸ்ட் கட்டிடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊட்டி ரூரல் டிஎஸ்பி விஜயலட்சுமி தலைமை தாங்கினார். அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கண்மணி, மஞ்சூர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வம், சசிகுமார், வேல்முருகன், மஞ்சூர் அனைத்து கடைக்காரர்கள் சங்க தலைவர் சிவராஜ், தனியார் வாகன ஓட்டுனர் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.

இதில் டிஎஸ்பி விஜயலட்சுமி பேசியதாவது: பெரும்பாலும் போதைக்கு அடிமையானவர்கள் திருட்டு, கொள்ளை, அடிதடி, கொலை, பாலியல் தொந்தரவுகளில் மட்டுமின்றி தீவிரவாத செய்களிலும் ஈடுபடுகின்றனர். கஞ்சா உள்ளிட்ட அனைத்து வகை போதை பொருட்களால் அதை பயன்படுத்துவோர்களுக்கு மட்டுமின்றி அவர்களது குடும்பமும் கடுமையாக பாதிக்கப்படுகிறது. சமுதாயம், கலாசர சீரழிவுகளுக்கும் போதை பழக்கம் காரணமாகிறது. அரசின் வழிகாட்டுதல்படி போதை பொருட்கள் இல்லா தமிழகத்தை உருவாக்க காவல்துறை முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இதற்கு பொதுமக்கள், வியாபாரிகள் என அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.  

 இதை தொடர்ந்து மஞ்சூர் காவல் நிலையத்திற்குட்பட்ட அனைத்து பகுதி கடைகளிலும் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ், புகையிலை உள்ளிட்ட போதை பொருட்கள்  விற்பனை மற்றும் உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும். கடைகளில் போதை பொருட்களை விற்பனை செய்யக்கூடாது. மீறி விற்பனை செய்யும் கடைகள் மீது காவல்துறை மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் சம்பந்தபட்ட கடைகளுக்கு சீல் வைக்கப்படும்.

வியாபாரிகள் அனைவரும் தங்களது கடைகளில் போதை பொருட்களை விற்பனை செய்ய மாட்டோம் என்ற அறிவிப்பு பலகையை வைக்க வேண்டும். ஏதேனும் கடைகளில் போதை பொருட்கள் விற்பனை செய்வது தெரியவந்தால் 0423-2223829 என்ற தொலைபேசி எண்ணிற்கு தகவல் தெரியப்படுத்த வேண்டும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப் பட்டது.
முன்னதாக மஞ்சூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகள் மத்தியில் போதை ஒழிப்பு குறித்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். கூட்டத்தில் போலீசார், வியாபாரிகள், வாகன ஓட்டுனர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.

Tags : SEAL-Pandalur , Manjoor: The police said in an awareness meeting that shops selling banned drugs will be sealed.
× RELATED விழுப்புரம் மின்னணு வாக்கு எந்திரம்: அறையின் கேமரா பழுது