ரூ.84 கோடி செலவில் திருப்பூரில் மருத்துவமனை கட்டுமான பணிகளை அமைச்சர் சி.வெ.கணேசன் ஆய்வு: பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு

திட்டக்குடி:  திருப்பூரில் ரூ. 84 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் மருத்துவமனை கட்டுமான பணிகளை அமைச்சர் சி.வெ. கணேசன் ஆய்வு செய்தார். பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். திருப்பூர் கொங்கு மெயின் ரோட்டில் அமைந்துள்ள ஈ.எஸ்.ஐ. மருந்தகம் மற்றும் கல்லூரி சாலையில் அமைந்துள்ள ஈ.எஸ்.ஐ. மருந்தகம் ஆகிய 2 மருந்தகங்களை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ. கணேசன் ஆய்வு செய்தார். மேலும் அங்கு முறையான சிகிச்சை அளிக்கப்படுகிறதா? என்பதை நோயாளிகளிடம் கேட்டு, மருத்துவர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கினார்.

 தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணைப்படி தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் திருப்பூரில் ரூ.84 கோடி செலவில் 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையின் கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார். அப்போது பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.  செல்வராஜ் எம்எல்ஏ, மேயர் தினேஷ் பாபு உடனிருந்தனர். பின்னர் அமைச்சர் சி.வெ. கணேசன் திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் திறன்நெறி வழிகாட்டு மையத்தில் நடந்த பயிற்சியில் கலந்து கொண்ட மாணவர்களிடையே கலந்துரையாடினர்.

 பின்னர் தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார்.  மாவட்ட நிர்வாகம், மாநகராட்சியின் சார்பில் திருப்பூரில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் பிப்ரவரி முதல் வாரத்தில் நடக்க உள்ளது. அதற்கான முதனிலைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் திருப்பூரில் நடந்தது.

இதில் அமைச்சர் சி.வெ. கணேசன் கலந்து கொண்டு முகாமிற்கான விரிவான ஏற்பாடுகள் குறித்து ஆலோசித்தார். முன்னதாக பெரியாரின் நினைவுத்தினத்தை முன்னிட்டு திருப்பூர் ரயில் நிலையம் அருகில்  அமைந்துள்ள பெரியார் சிலைக்கு அமைச்சர் மாலை அணிவித்து மலர்  தூவி மரியாதை செலுத்தினார்.

Related Stories: