×

ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கொட்டும் மழையில் சடலங்களை கொண்டு செல்லும் ஊழியர்கள்: பேட்டரி வாகனம் வழங்க கோரிக்கை

தண்டையார்பேட்டை: சென்னை ராயபுரம் ஸ்டான்லி அரசு மருத்துத்துவமனை, கடந்த 1964ம் ஆண்டு கட்டப்பட்டது. வடசென்னையில் மிகப்பெரிய மருத்துவமனையான இங்கு தினமும் உள்நோயாளிகளாக 2,000 பேரும், புறநோயாளிகளாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரும் சிகிச்சை பெறுகின்றனர். இந்த மருத்துவமனையில் இதயம், கல்லீரல், நரம்பியல், சிறுநீரகம், காது, மூக்கு, தொண்டை உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட துறைகள் உள்ளன. தமிழகம் மட்டுன்றி ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும், உயர் சிகிச்சை பெறுவதற்காக 1,000க்கும் மேற்பட்டோர் இங்கு வந்து செல்கின்றனர்.

இந்த மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறப்பவர்கள் மற்றும் வெளியில் இருந்து கொண்டு வரப்படும் விபத்து, தற்கொலை, கொலை உள்ளிட்ட சம்பவங்களில் இறந்தவர்களின் சடலங்கள், அங்குள்ள பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். மருத்துவமனையில் இருந்து இந்த பிரேத பரிசோதனை கூடம் 200 மீட்டர் தூரத்தில்  அமைந்துள்ளது. இங்கு சடலங்களை ஸ்டெச்சரில் வைத்து மருத்துவமனை ஊழியர்கள் கொண்டு செல்கின்றனர். இவ்வாறு மருத்துவமனையில் இருந்து பிரேத பரிசோதனை கூடத்திற்கு செல்லும் பாதையில் மேற்கூரை இல்லாமல் திறந்த வெளியாக உள்ளதால், மழைக்காலங்களில் சடலங்களை நனைந்தபடி கொண்டு செல்லும் நிலை உள்ளது.

மருத்துவமனை பணியாளர்கள் மற்றும் சடலங்களின் உறவினர்களும் நனைந்தபடி செல்கின்றனர். எனவே, பிரேத பரிசோதனை கூடத்திற்கு செல்லும் பாதையில் மேற்கூரை அமைக்க வேண்டும் அல்லது சடலங்களை கொண்டு செல்ல பேட்டரி வாகன வசதி ஏற்படுத்தி தர வேண்டும், என மருத்துவமனை பணியாளர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

இந்நிலையில், வியாசர்பாடி சர்மா நகரை சேர்ந்த ராபர்ட் கென்னடி என்பவர் இந்த மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்ல உத்தரவிடப்பட்டது. அப்போது, மழை பெய்து கொண்டிருந்ததால், இறந்தவரின் உறவினர்கள் பேட்டரி வாகனம் அல்லது சிறிய ஆம்புலன்ஸ் மூலம் உடலை பிரேத  பரிசோதனை அறை வரை எடுத்துச் செல்லும்படி கேட்டனர்.

ஆனால், மருத்துவமனை நிர்வாகம் அதற்கு அனுமதிக்காததால், கொட்டும்  மழையில் உடலை உறவினர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் ஸ்டெச்சரில் வைத்து  தள்ளிக் கொண்டு சென்றனர். ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில்  இறந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை கூடத்திற்கு எடுத்துச் செல்வதற்காக தனியாக பேட்டரி வாகனங்கள் இயக்கப்படுகிறது.

அதேபோல் இங்கும் பேட்டரி வாகன வசதி ஏற்படுத்தி தர வேண்டும் அல்லது இங்கு தனியார் தொண்டு நிறுவனம்  கொடுத்துள்ள ஆம்புலன்ஸ் பயன்பாடின்றி உள்ளதால், அதன் மூலம் சடலங்களை பிரேத பரிசோதனை அறைக்கு கொண்டு செல்ல அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Stanley Govt Hospital , Stanley Govt Hospital, staff who transport dead bodies in rain, request for provision of battery vehicle
× RELATED ஸ்டான்லி அரசு மருத்துவமனையில்...