×

போலீசார் மீது தாக்குதல் நடந்தால் எதிரிகளை துப்பாக்கியால் சுடலாம்: நெல்லையில் டிஜிபி சைலேந்திரபாபு பேட்டி

நெல்லை: போலீசார் மீது தாக்குதல் நடந்தால் தற்காத்துக் கொள்ள எதிரிகளை துப்பாக்கியால் சுடுவதற்கு அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக நெல்லையில் தமிழக போலீஸ் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்தார். நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், சட்டம் ஒழுங்கு தொடர்பாக போலீஸ் உயரதிகாரிகளுடன் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர், இருசக்கர வாகன ரோந்து பணியை துவக்கி வைத்தார். தொடர்ந்து டிஜிபி சைலேந்திரபாபு நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் 3.0 கஞ்சா தடுப்பு வேட்டை மூலம் 9,207 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 12,035 பேர் கைது செய்யப்பட்டனர்.

ரூ.23 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. தமிழகம் முழுவதும் 776 ரவுடிகள் மீது வழக்கு பதியப்பட்டு உள்ளது. 3,948 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். நாட்டிலேயே தமிழகத்தில் மட்டுமே குண்டர் தடுப்பு சட்டத்தில் அதிகம் பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் சாதி மோதலை தடுக்கும் வகையில் குற்றவாளிகளை போலீசார் கண்காணித்து வருகின்றனர். கூலிப்படைகளின் அட்டகாசத்தை குறைப்பதற்காக தனிப்படை போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கடந்த காலங்களில், தமிழகத்தில் பல இடங்களில் காவல்துறை மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.

ஆனால் தற்போது அதுபோன்ற சம்பவங்கள் நடந்தால் போலீசார் தற்காப்புக்காக துப்பாக்கியால் எதிரிகளை சுடலாம் என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. பணியின் போது உயிரிழந்த 1,132 காவலர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு காவல்துறையில் வேலை வழங்கப்பட்டுள்ளது.போக்சோ சட்டத்தின் கீழ் 4,400 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் கொலை வழக்குகளில் சிறுவர்கள் ஈடுபட்டால் அவர்களுக்கு சரியான தண்டனை பெற்று தரப்படும்.

அவர்களை தூண்டி விடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். பேட்டியின் போது நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ்குமார், நெல்லை சரக டிஐஜி பிரவேஷ்குமார், எஸ்பிக்கள் நெல்லை சரவணன், தூத்துக்குடி பாலாஜி சரவணன், தென்காசி கிருஷ்ணராஜ், கன்னியாகுமரி ஹரிகிரண்பிரசாத், மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள் சீனிவாசன், சரவணகுமார், அனிதா மற்றும் போலீஸ் உயரதிகாரிகள்  உடனிருந்தனர்.

Tags : DGP ,Sailendrababu ,Nellai , If there is an attack on the police, the enemy can be shot: DGP Sailendrababu in Nellai
× RELATED பாமகவினர் மீது நடவடிக்கை எடுக்கக்...