கூடலூர்: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சென்று திரும்பிய பக்தர்கள் வாகனம், குமுளி மலைச்சாலையில் விபத்துக்குள்ளானதில் 8 பேர் பலியாயினர். தந்தை, மகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே சண்முகசுந்தரபுரத்தை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் 10 பேர், கடந்த 3 நாட்களுக்கு முன் சபரிமலை புறப்பட்டனர். இக்குழுவிலுள்ள ஆண்டிபட்டியை அடுத்த பிச்சம்பட்டியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (42) என்பவரின் காரில், இவர்கள் புறப்பட்டு சென்றனர். சபரிமலையில் தரிசனம் முடிந்தபிறகு அவர்கள் நேற்று முன்தினம் இரவு ஆண்டிப்பட்டி நோக்கி காரில் வந்து கொண்டிருந்தனர். காரை கோபாலகிருஷ்ணன் ஓட்டி வந்துள்ளார்.
இரவு 10.30 மணி அளவில் குமுளி - லோயர்கேம்ப் மலைப்பாதையில் வழித்துணை மாதா கோயில் அருகே, திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி, மலைப்பாதையில் இருந்து சுமார் 50 அடி பள்ளத்தில் தலைகீழாக பாய்ந்தது. அப்போது பெரியாறு அணையில் இருந்து லோயர்கேம்ப் மின் உற்பத்தி நிலையத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் ராட்சத குழாய்கள் மீது விழுந்து வழுக்கிச்சென்ற கார், குழாய் இணைப்பு தடுப்புச்சுவரில் மோதி நொறுங்கியது. பின்னால் வாகனத்தில் வந்தவர்கள் குமுளி காவல்துறையினருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தமிழக, கேரள போலீசார், தீயணைப்புத்துறையினர், வனத்துறையினர், குமுளி மற்றும் லோயர்கேம்ப் தன்னார்வல இளைஞர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த கோர விபத்தில் காரில் வந்த, ஆண்டிபட்டி சக்கம்பட்டியை சேர்ந்த முனியாண்டி (55), ஆண்டிபட்டி தேவதாஸ் (55), நாகராஜ்(46), சிவக்குமார் (45), மறவபட்டி கன்னிச்சாமி (55), எஸ்எஸ் புரம் வினோத்(47), ஜி.பொம்மிநாயக்கன்பட்டி கலைச்செல்வன் (45) ஆகிய 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். படுகாயமடைந்த கார் டிரைவர் கோபாலகிருஷ்ணன் மற்றும் ஆண்டிபட்டியை சேர்ந்த ராஜா(40), அவரது மகன் ஹரிஹரன் (7) ஆகியோர் மீட்கப்பட்டு கம்பம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சையளித்து, பின்னர் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதில் கோபாலகிருஷ்ணன் வழியிலேயே உயிரிழந்தார். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை எட்டாக உயர்ந்தது. படுகாயமடைந்த ராஜா, அவரது மகன் ஹரிஹரனுக்கு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இரவோடு இரவாக விபத்துக்குள்ளான கார் கிரேன் மூலம் மீட்கப்பட்டது. இது குறித்து குமுளி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். எடப்பாடி இரங்கல்: குமுளி மலை சாலையில் கார் விபத்தில் மரணமடைந்த 8ஐயப்ப பக்தர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவர்களது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதிபெற வேண்டுகிறேன் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
* தந்தை, மகன் சிகிச்சைக்கு ரூ.1.50 லட்சம் நிதி உதவி
விபத்தில் படுகாயமடைந்து தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், ஆண்டிபட்டியை சேர்ந்த ராஜா, அவரது மகன் ஹரிஹரனை, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார். பின் குடும்பத்தினருக்கு சிகிச்சைக்காக ரூ.1.50 லட்சம் நிதி உதவி வழங்கினார். பின்னர் பிரேத பரிசோதனை கூடத்திற்கு சென்று அங்கு கூடியிருந்த இறந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
அப்போது, இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்யும். இதற்கான அறிவிப்பை முதல்வர் வெளியிடுவார் என்றார். அப்போது கலெக்டர் முரளீதரன், கம்பம் எம்எல்ஏ ராமகிருஷ்ணன், ஆண்டிபட்டி எம்எல்ஏக்கள் மகாராஜன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
