பழையாறு பாதுகாப்பை வலியுறுத்தி கன்னியாகுமரி முதல் நாகர்கோவில் வரை மாரத்தான்: 2 அமைச்சர்கள், டிஜிபி பங்கேற்று ஓடினர்

நாகர்கோவில்: குமரி மாவட்ட முக்கிய நதியான பழையாறு பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் மாரத்தான் போட்டி இன்று நடந்தது. 21 கி.மீ., 10 கி.மீ., 5 கி.மீ. என 3 பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றன. இதில் 21 கி.மீ. போட்டி, கன்னியாகுமரி கடற்கரையில் இருந்து தொடங்கி, நாகர்கோவில் அண்ணா ஸ்டேடியத்தில் நிறைவடைந்தது. 10 கி.மீ., 5 கி.மீ. போட்டிகள் அண்ணா ஸ்டேடியத்தில் தொடங்கி வடசேரி, கோட்டார் உள்ளிட்ட பகுதிகள் வழியாக சென்று மீண்டும் அண்ணா ஸ்ேடடியத்தில் முடிவடைந்தன. இதில் 21 கி.மீ. போட்டியை, தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கொடியசைத்து தொடங்கி வைத்து அவரும் இதில் பங்கேற்று ஓடினார்.

அவருடன் அமைச்சர் மனோ தங்கராஜ், தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு, மாவட்ட கலெக்டர் அரவிந்த், எஸ்.பி.க்கள் ஹரிகிரன் பிரசாத் (கன்னியாகுமரி), சரவணன் (நெல்லை) உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர். இது தவிர நெல்லை, தூத்துக்குடி, நாமக்கல், ஒசூர், சேலம், கோவை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும், கேரளா, கர்நாடகம், ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இதே போல் 10 கி.மீ., 5 கி.மீ. தூர ஓட்ட போட்டியிலும் ஏராளமானவர்கள் பங்கேற்று ஓடினர். மொத்தம் சுமார் 2600 பேர் வரை பங்கேற்று ஓடினர்.

போட்டிகள் அனைத்தும் நாகர்கோவில் அண்ணா ஸ்டேடியத்தில் முடிவடைந்தது. பின்னர் பரிசளிப்பு விழா நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் மனோ தங்கராஜ், டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்டோர் பரிசுகளை வழங்கினர். இதில் 21 கி.மீ. ஓட்ட போட்டியில் கர்நாடகத்தை சேர்ந்த பாரசப்பா முதல் பரிசையும், பாலக்காட்டை சேர்ந்த ஜெகநாத் 2ம் பரிசையும், கோவையை சேர்ந்த வினோத் 3ம் பரிசையும் பெற்றனர். 10 கி.மீ. ஆண்கள் பிரிவில், ஆந்திராவை சேர்ந்த தினேஷ் கவுதம் ரெட்டி முதல் பரிசையும், பெண்கள் பிரிவில் கிறிஸ்டல் முதல் பரிசையும் பெற்றனர். இந்த போட்டியில் 21 கி.மீ. பிரிவில் முதல் பரிசாக ரூ.25 ஆயிரமும், 10 கி.மீ. பிரிவில் முதல் பரிசாக ரூ.10 ஆயிரமும், 5 கி.மீ. பிரிவில் முதல் பரிசாக ரூ.5 ஆயிரமும் வழங்கப்பட்டது.

Related Stories: