×

4 ஆண்டுகளுக்கு பின் கைதான நாகர்கோவில் காசி கூட்டாளியை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு: ஆபாச வீடியோ வழக்கு சூடுபிடிக்கிறது

நாகர்கோவில்: 4 ஆண்டுகளுக்கு பின் கைதான நாகர்கோவில் காசி கூட்டாளியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் காசி (27). இவர், பல இளம்பெண்கள், மாணவிகளிடம் பழகி ஆபாசமான முறையில் வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுத்ததுடன், அவற்றை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாகக் கூறி, அந்த பெண்களிடம் பணம் பறித்தும் ஏமாற்றினார்.

சென்னையைச் சேர்ந்த பெண் டாக்டர், நாகர்கோவில் பெண் இன்ஜினியர் உள்ளிட்ட பலர் காசிக்கு எதிராக புகார் அளித்தனர். இந்த வழக்கில் கடந்த 2020ல் காசி கைது செய்யப்பட்டார். தற்போது இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். காசியிடம் இருந்து 1,900 ஆபாச புகைப்படங்களும், 410 ஆபாச வீடியோக்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 141 பெண்கள் வரை காசியால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெண்களை ஏமாற்றி, ஆபாச படம் மற்றும் வீடியோக்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக மிரட்டி பணம் பறித்த வழக்கின் விசாரணை நாகர்கோவில் மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது.

இந்த வழக்கில் நாகர்கோவில் நீதிமன்றம் கடந்த ஜூன் 14ல் தீர்ப்பளித்தது. அதில் காசிக்கு வாழ்நாள் ஆயுள் தண்டனையும், ரூ.1.10 லட்சம் அபராதமும் விதித்தது. இந்த வழக்கில் காசியின் 2 நண்பர்கள் மற்றும் தடயங்களை மறைத்ததாக காசியின் தந்தை தங்கப்பாண்டியன் உள்ளிட்டோர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். இதில் அவர்கள் கைதாகி ஜாமீனில் வந்தனர். இந்த வழக்கில் 2வது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட ராமன்புதூரை சேர்ந்த ராஜேஷ் சிங் துபாயில் இருந்தார்.

இந்நிலையில் துபாயில் இருந்து நாகர்கோவில் வருவதற்காக சென்னை விமான நிலையத்திற்கு ராஜேஷ் சிங் வந்தார். அவரை கைது செய்த விமான நிலைய போலீசார், ராஜேஷ் சிங்கை நாகர்கோவில் சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் பார்வதியிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து ராஜேஷ்சிங்கை, நாகர்கோவில் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர் நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஏற்கனவே இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையிலும் ராஜேஷ்சிங்கிடம் விசாரணை நடத்தப்பட வேண்டி உள்ளது.

எனவே இவரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர். இதற்காக நாளை அல்லது நாளை மறுதினம் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் மனு தாக்கல் செய்ய உள்ளனர். காசி மீது கடந்த 2020ம் ஆண்டு 7 வழக்குகளும், 2021 ல் ஒரு வழக்கும் என மொத்தம் 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருந்தன. இதில் ஒரு வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. 6 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post 4 ஆண்டுகளுக்கு பின் கைதான நாகர்கோவில் காசி கூட்டாளியை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு: ஆபாச வீடியோ வழக்கு சூடுபிடிக்கிறது appeared first on Dinakaran.

Tags : NAGARGO ,GAZI ,Kasi ,Ganesapuram ,Kanyakumari district Nagargo ,Dinakaran ,
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு அணைகள்...