×

சைனீஸ் காய்கறிகள் விலை உயர்வு ஊட்டி மார்க்கெட்டில் கிளைகோஸ் ஒரு கிலோ ரூ.515க்கு விற்பனை

ஊட்டி : ஊட்டியில்  சைனீஸ் காய்கறிகள் விலை உயர்ந்துள்ள நிலையில், ஊட்டி மார்க்கெட்டில் ஒரு  கிலோ கிளை கோஸ் ரூ.515க்கு ஏலம் போனது.நீலகிரி மாவட்டத்தில் தேயிலை  மற்றும் மலை காய்கறிகள் அதிக பரப்பளவில் விவசாயம் மேற்கொள்ளப்பட்டாலும்,  சைனீஸ் காய்கறிகளும் விளைவிக்கப் படுகிறது.ஊட்டி சுற்று வட்டார பகுதிகளாக கோடப்பமந்து, தாம்பட்டி, கொதுமுடி, தூனேரி, கூக்கல்தொரை, கொல்லிமலை ஒரநள்ளி  உள்ளிட்ட பகுதிகளில் சைனீஸ் காய்கறிகளான சுகுணி,ரெட் கேபேஜ்,சைனீஸ்  கேபேஜ்,புரூக்கோலி, ஐஸ்பர்க்,செல்லரி,லீக்ஸ்,பார்சிலி,லெட்யூஸ்,ஸ்பிரிங்  ஆனியன் போன்றவைகள் விளைவிக்கப்படுகின்றன. இவ்வகை காய்கறிகள் நட்சத்திர  ஒட்டல்கள் போன்றவற்றில் நூடுல்ஸ்,சூப்,பர்கர் மற்றும் துரித உணவுகள்  தயாரிக்க பயன்படுத்தப்படுகின்றன.

 நீலகிாியில் விளைவிக்கக்கூடிய சைனீஸ்  காய்கறிகளை மார்க்கெட் வியாபாரிகள் விவசாயிகளிடம் இருந்து வாங்கி, அதனை  கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் உள்ள நட்சத்திர ஒட்டல்களுக்கு  அனுப்புகின்றனர். இதுமட்டுமின்றி சில வடமாநிலங்களுக்கும்  அனுப்பப்படுகின்றன. இந்நிலையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு காரணமாக தற்போது  சைனீஸ் காய்கறிகளுக்கு தேவை அதிகரித்துள்ளது. இதனால் கிறிஸ்துமஸ்,  புத்தாண்டை குறிவைத்து கடந்த இரு மாதங்களுக்கு முன்பு பயிரிடப்பட்ட இவற்றை  அறுவடை செய்து விவசாயிகள் மார்க்கெட்டிற்கு அனுப்பி வைத்து வருகின்றனர்.

இவற்றின்  விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. சாதாரண நாட்களில் 5 முதல் 10க்கு  விற்பனையாகி வந்த சுகுணி காய் தற்போது ரூ.50 வரை விலை உயர்ந்துள்ளது.  ரூ.70-100க்கு விறபனையாகி வந்த புரூக்கோலி தற்போது ரூ.220க்கும், சைனீஸ்  கேபேஜ் ரூ.50க்கும், ஐஸ்பர்க் ரூ.50க்கும், செல்லரி ரூ.40 வரையிலும்,  ரூ.40க்கு விற்பனையான லீக்ஸ் ரூ.80க்கும், ஸ்பிரிங் ஆனியன் ரூ.70 வரையும்  விலை உயர்ந்துள்ளது.

சைவ பிரியர்கள் விரும்பி உண்ணக்கூடிய சூப், குழம்பு  உள்ளிட்ட பல்வேறு உணவுகள் தயாரிக்க பயன்படுத்தப்படும் ஸ்ப்ரவுட் எனப்படும்  கிளை கோஸ் கிலோ ஒன்று ரூ.515க்கு விற்பனையானது. சாதாரண நாட்களில் ரூ.100  முதல் 150 வரை விற்பனையாகி வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சைனீஸ்  காய்கறிகள் விலை உயர்வானது ஜனவரி முதல் வாரம் வரை நீடிக்க வாய்ப்புள்ளது.  அதன்பின் விலை குறையும் என வியாபாரிகள் தெரிவித்தனர். இதனிடையே சைனீஸ் காய்கறிகள் விலை உயர்ந்துள்ளதால் அவற்றை பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


Tags : Ooty , Ooty: While the price of Chinese vegetables has gone up in Ooty, one kg of cabbage was auctioned at Rs.515 in the Ooty market. Nilgiri
× RELATED புலி நடமாட்ட தகவலால் தடை...