×

செய்யாறில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் கால்நடைகளை சுற்றித்திரிய விட்டால் உரிமையாளருக்கு ₹5 ஆயிரம் அபராதம்

*நகர மன்ற கூட்டத்தில் தீர்மானம்

செய்யாறு : செய்யாறில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் கால்நடைகளை சுற்றித்திரியவிட்டால் அதன் உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பது என நகர மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.செய்யாறு நகராட்சி வளாகத்தில் நகர மன்ற தலைவர் ஆ.மோகனவேல் தலைமையில் மன்ற கூட்டம் நேற்று நடந்தது. நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) ஏ.சரவணன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் பின்வருமாறு:

வெங்கடேசன் (அதிமுக): நகரில் நடைபெறும் வளர்ச்சி பணிகள் குறித்து கவுன்சிலர்களுக்கு விவரம் தெரியப்படுத்த ஒவ்வொரு கூட்டத்திலும் முறையிட்டு வருகிறேன். வார்டுகளில் தேவைகளை அறிந்து முன்னுரிமை அடிப்படையில் பணிகளை மேற்கொள்ளுங்கள். பத்மப்பிரியா (பாமக): 20வது வார்டில் சீரான குடிநீர் விநியோகிக்க வேண்டும். கழிவுநீர் கால்வாய்களை பெயரளவுக்கு தான் சுத்தம் செய்கிறார்கள். போர்வெல்களை சீர் செய்து தண்ணீர் கிடைக்க வழிவகை செய்யுங்கள்.

சரஸ்வதி (திமுக): 1வது வார்டில் அறிவு சார் மையம் நூலகம் பயன்பாட்டிற்கு வந்தது. அந்த வார்டு கவுன்சிலரான எனக்கு தெரியப்படுத்தவில்லை. முதல் வார்டில் தெருக்களில் சாலை வசதி, கழிவுநீர் கால்வாய் பணிகள் மேற்கொள்வது பற்றி தகவல் சொல்வதே இல்லை.விஸ்வநாதன் (திமுக): பங்களா தெரு மகளிர் பள்ளி முகப்பில் சாலையோர கடைகளை அகற்றிட வேண்டும்.

ரமேஷ் (திமுக): நகரில் உள்ள அனைத்து கழிவறைகள் பயன்பாட்டில் உள்ளதா என்று தெரியாமல் பழுது பார்ப்பது அவசியம். மக்கள் வரிப்பணம் என்பதை உணர்ந்து தேவை அறிந்து பணிகளை செய்யுங்கள். நகராட்சியில் வினியோகிக்கப்படும் குடிநீரில் குளோரினேசன் இல்லை. ருசியும் இல்லை. பலரும் கேன் வாட்டர் வாங்கித்தான் பயன்படுத்துகிறார்கள்.

சவுந்தரபாண்டியன் (திமுக): கடந்த 3 ஆண்டுகளாக வரவு செலவு பட்ஜெட் நகர மன்ற கூட்டத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. எனக்கு இதில் முறைகேடு இருக்குமோ என்ற சந்தேகம் உள்ளது. ரீ ஆடிட்டிங் செய்ய முடியுமா?

சரவணன் (ஆணையாளர்): முதலில் வரவு செலவு கணக்குகளை ஆடிட் ரிப்போர்ட் அறிக்கையை அலுவலகத்தில் வந்து பெற்றுக்கொள்ளுங்கள். அதன் பின்னர் அடுத்த நடவடிக்கை பற்றி பேசுங்கள். நகர மன்ற தலைவர் மோகனவேல்: சேட்டிலைட் மூலமாக அரசின் ஏஜென்சிகள் பல திட்ட பணிகளை தேர்வு செய்து பணிகளை மேற்கொள்கின்றனர்‌. பொது நிதி அதிகரித்த பின்னர் 27 வார்டுகளிலும் கல்வெர்டு பணிகள் மேற்கொள்ளப்படும்.

குடிநீர் தட்டுப்பாடு குறித்து தகவல் தெரிவித்தால் நகராட்சி டேங்கர் லாரி மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படும். சில இடங்களில் திடீரென பைப்லைன் உடைப்பினால் குடிநீர் விநியோகத்தில் தடை ஏற்பட்டு வருகிறது.

தொடர்ந்து, குடிநீர் சீராக விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழக முதல்வர் காணொலி காட்சியில் திறந்த அறிவு சார் மையத்தில் நன்கொடையாளரின் உதவியுடன் அதில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. வசதி உள்ளவர்கள் வேண்டுமானால் கேன் வாட்டர் வாங்கி இருக்கலாம். ஆனால் 27 வார்டுகளில் பலரும் நகராட்சி குடிநீரை நம்பித்தான் இருக்கிறார்கள்.

இவ்வாறு கூட்டம் தொடங்கியது முதல் முடியும் வரை சலசலப்பாகவும் பரபரப்பாகவும் இருந்தது. தொடர்ந்து இக்கூட்டத்தில், ரூ.4.44 கோடியில் முதல்வரால் திறந்து வைக்கப்பட்ட மார்க்கெட் வணிக வளாக கடைகளுக்கு பொது ஏலம், நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் ரூ.2.15 கோடியில் 5 இடங்களில் தார்சாலை, மத்திய நிதி குழு ஆணைய மானிய நிதி ரூ.1.45 கோடியில் 8 இடங்களில் தார்சாலை, ரூ.73 லட்சத்தில் தெப்பக்குளத்தை அம்ருத் திட்டத்தில் புதுப்பித்தல், ரூ.4.57 கோடியில் நகர்ப்புற மேம்பாடு திட்டத்தில் நகராட்சி பஸ் ஸ்டாண்ட் புதுப்பித்தலுக்காக பைபாஸ் சாலையில் தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமைப்பது, மத்திய நிதி குழு சுகாதார திட்ட மானிய நிதி ரூ.5 கோடியில் மாவட்ட அரசு பொது மருத்துவமனையில் கூடுதல் கட்டிடம் கட்டுதல், மாநில உயர்மட்ட திட்ட நிதி ரூ.96.75 லட்சத்தில் 9 சமுதாய கழிப்பிடங்கள் சீரமைத்தல், சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறாக சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தல் என்பன உள்ளிட்ட 51 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இக்கூட்டத்தில் நகராட்சி பொறியாளர் சுசில்தாமஸ், சுகாதார ஆய்வாளர் மதனராசன், பில்டிங் இன்ஸ்பெக்டர் சியாமலதா, ஓவர்சியர் நந்தகுமார், உதவியாளர் கீர்த்திவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

The post செய்யாறில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் கால்நடைகளை சுற்றித்திரிய விட்டால் உரிமையாளருக்கு ₹5 ஆயிரம் அபராதம் appeared first on Dinakaran.

Tags : Seyyar ,A.Mohanavel ,Dinakaran ,
× RELATED லோடு ஆட்டோ பள்ளத்தில் கவிழ்ந்து...