×

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவர்களுக்கான மனநல நல்லாதரவு மன்றம் துவக்கம்-முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலியில் தொடங்கி வைத்தார்

திருவண்ணாமலை : திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மாணவர்களின் மனஉறுதி காக்கும் மனநல நல்லாதரவு மன்றத்தை காணொலி காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.தமிழகத்தில் உள்ள 36 அரசு மருத்துவக் கல்லூரிகளில், பள்ளி மாணவர்களின் மனஉறுதியை காக்கும் மனநல ஆதரவு மன்றம் நேற்று தொடங்கப்பட்டது. அதையொட்டி, சென்னை கீழ்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
மேலும், இத்திட்டத்தின் விரிவாக்க வரைவு நூலையும் வெளியிட்டார். பள்ளி மாணர்களின் மன உறுதி காக்கும் ‘மனநல நல்லாதரவு மன்றம்’ மற்றும் நட்புடன் உங்களோடு மனநல சேவை உதவி எண் 14416 ஆகியவற்றையும் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார்.

அதையொட்டி, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில், துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, கலெக்டர் பா.முருகேஷ், மருத்துவக் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) முத்துகுமார், சுகாதார பணிகள் துணை இயக்குநர் செல்வகுமார், மருத்துவமனை கண்காணிப்பார் ஸ்ரீதரன், ஆர்எம்ஓ அரவிந்தன், மனநல மன்ற துறைத்தலைவர் சிவலிங்கம் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பள்ளி, கல்லூரி மாணவர்கள் சமீபகாலமாக பல்வேறு காரணங்களால் தற்கொலை மற்றும் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகிறார்கள். அதற்கான காரணத்தை கண்டறிந்து, உரிய காலத்தில் ஆலோசனை மற்றும் உளவியல் சிகிச்சை அளித்தால், தற்கொலை போன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் தடுக்க முடியும்.மேலும், கால சூழ்நிலையினால் ஏற்படும் மனஅழுத்ததை எதிர்கொள்ள மாணவர்களுக்கு இத்திட்டத்தின் மூலம் பயிற்சிகள் அளிக்கப்படும்.

இந்த திட்டத்தின் செயல்பாடுகள், முதற்கட்டமாக கல்லூரி மனநல மருத்துவர்கள் மருத்துவ மாணவர்களுக்கு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்பயிற்சியை பெறும் மாணவர்கள் `மனம் தூதுவர்’ என்று அழைக்கப்படுவர். இதன் தொடர்ச்சியாக, பள்ளி மற்றும் கல்லூரி, ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் கொடுக்கப்படும். பயிற்சி பெறும் ஆசிரியர்கள், மாணவர்களின் நடவடிக்கைகள் மற்றும் குணமாற்றத்தை கண்டறிந்து ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை அளித்து மனமாற்றத்தை ஏற்படுத்தும் நிலை உருவாகும்.

Tags : Mental ,Wellbeing Forum ,Tiruvannamalai Government Medical ,College ,Principal ,M.K.Stalin , Thiruvannamalai : At Thiruvannamalai Government Medical College Hospital, students' mental health is maintained
× RELATED மனவளர்ச்சி குன்றியோர் மையத்தில் கலெக்டர் ஆய்வு