×

கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி வீட்டு வாசலில் கொட்டும் பனியில் கைக்குழந்தையுடன் இளம்பெண் தர்ணா-பாவூர்சத்திரத்தில் பரபரப்பு

பாவூர்சத்திரம் :  பாவூர்சத்திரத்தில் கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி  கொட்டும் பனியில் அவரது வீடு முன்பு அமர்ந்து இளம்பெண் கைக்குழந்தையுடன் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஆஸ்திரேலியாவில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார்.

மணமாகி விவாகரத்தான இவருக்கும், இதேபோன்று விவாகரத்தான தூத்துக்குடி கீழசண்முகபுரத்தைச் சேர்ந்த பொன்னுசாமி மகள் பபிதாவுக்கும் (39) மேட்ரிமோனி மூலம் சுயவிவரம் தெரிந்து பெரியோர் முன்னிலையில் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோயிலில் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒன்றரை வயது மற்றும் 5 மாதத்தில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக ஆஸ்திரேலியாவில் இருந்து ஊர் திரும்பிய பபிதாவின் கணவர், தற்போது வீட்டில் இருந்தபடியே பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் கடந்த சில மாதத்திற்கு முன் பபிதா, 2வது குழந்தை பிரசவத்திற்காக தூத்துக்குடியில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்றார். அதன்பிறகு அவரது கணவர் பபிதாவை பார்க்கச் செல்லவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் கணவர் தன்னை விவாகரத்து செய்ய நடவடிக்கை எடுப்பது பபிதாவுக்கு தெரிய வந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு கணவர் வீட்டிற்கு வந்தார். அப்போது, கணவர் மற்றும் அவரது பெற்றோர் பபிதாவை வீட்டிற்குள் நுழைய விடாமல் முன்பக்க கதவை பூட்டி விட்டனர். இதனால் பபிதா வேறு வழியின்றி குழந்தைகள் மற்றும் உடைமைகளுடன் வீட்டு வாசலில் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். கொட்டும் பனியில் கைக்குழந்தையுடன் பபிதா, நீண்ட நேரம் வாசலில் உட்கார்ந்திருப்பதை பார்த்த அக்கம், பக்கத்தினர் இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பபிதாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர், 2வது குழந்தை பிறந்து 5 மாதமாகியும் கணவர் தன்னை அழைத்துச் செல்லாததால் பெற்றோர் வீட்டில் இருந்து புறப்பட்டு வந்ததாக கூறினார். மேலும் அவர், கணவருடன் தன்னை சேர்த்து வைக்கும்படி போலீசாரிடம் கூறினார்.

இதைத்தொடர்ந்து கணவரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர், மனைவியை விவகாரத்து செய்ய கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளேன். இதனால் அவரை வீட்டிற்குள் அழைத்துச் செல்ல முடியாது என்று போலீசாரிடம் திட்டவட்டமாக தெரிவித்தார். போலீசார் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை.
இதைத் தொடர்ந்து நள்ளிரவு 12 மணியளவில் பபிதா மற்றும் குழந்தைகளை போலீசார், வடகரை அரசு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அவரது கணவரை காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Tharna-Bavurzatrah , Bhavoorchatram: In Bhavoorchatram, a young woman sits in front of her house in the pouring snow with her husband and a dharna with her infant child.
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான...