சென்னை: நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் நேற்று விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: வரும் 24ம் தேதி மநீம தலைவர் கமல்ஹாசன், ராகுல் காந்தியின் அழைப்பை ஏற்று, டெல்லியில் பாரத் ஜோடா யாத்திரையில் பங்கேற்கிறார் என்பதும், அவருடன் இணைந்து நடந்து செல்ல இருக்கிறார் என்பதும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட செய்தி. அந்த யாத்திரையில் கமல்ஹாசனுடன் மாநில நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அதிகளவில் கலந்துகொள்கின்றனர். எனவே, யாத்திரையில் கலந்துகொள்ள இருக்கும் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் கொரோனா தடுப்பு பாதுகாப்பு விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று கமல்ஹாசன் உத்தரவிட்டுள்ளார். மேலும், தற்போது டெல்லியில் கடுமையான குளிர் வாட்டுவதால், அனைவரும் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் வரும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
