×

குளத்தூர் தாலுகா வாழமங்கலம் கிராமத்தில் பல்லவர்கால அய்யனார் சிற்பம் கண்டெடுப்பு

விராலிமலை: புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா, வாழமங்கலம் கிராமத்தில் சுமார் 1000 ஆண்டுகள் பழமையான பல்லவர் காலத்தைச் சேர்ந்த அய்யனார் சிற்பம் பாண்டியநாடு பண்பாட்டு மையத்தை சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் கீரனூர் முருக பிரசாத் நடத்திய கள ஆய்வில் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளது. வாழ மங்கலத்தின் மேற்கே, அடர்ந்த புதருக்குள், செக்கடி கொல்லை என்ற இடத்தில், மண்ணில் புதைந்த நிலையில் மூன்றரை அடி உயரமும் இரண்டரை அடி அகலத்துடன், இடது காலை மடக்கி, அக்கால் மேல் இடக்கையினை வைத்த வண்ணத்துடன், வலது காலை தொங்கவிட்டு அக்கால் மேல் வலது கையினை வைத்த வண்ணத்துடன், புடைப்புச் சிற்பமாக காட்சியளிக்கிறார்.

சிற்பத்தின் வடிவமைப்பை வைத்து பார்க்கும்போது பல்லவர் கால கலைப் பாணியாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. மிகப் பழமையான சிற்பம் என்பதால் முகம் பகுதி சேதம் அடைந்தும் காணப்படுகிறது. பரந்து விரிந்த சடையுடன், இரு காதுகளில் பத்ர குண்டலத்துடன், கழுத்தில் கண்டிகை சாவடி அணிகலன்களுடன் முப்புரி நூலுடன், கைகளில் கைவளை அணிந்து, கைகளில் ஆயுதமேதும் ஏந்தாமல் வெறுமனே காட்சியளிக்கிறார். இடுப்பில் குறுவாளுடனும் இடுப்பிலிருந்து கால்களுக்கு யோக பட்டை அணிந்துள்ள இந்த பழமையான அய்யனார் சிற்பத்தை மீட்டெடுத்து அருங்காட்சியகத்தில் பாதுகாக்க வேண்டும் என்பது தொல்லியல் ஆய்வாளர்கள் மற்றும் பொது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags : Ayyanar ,Vazhamangalam ,Kulathur , Kulathur taluk, Pallavar period Ayyanar sculpture,
× RELATED பொறையாறு திருமுடி சாஸ்தா அய்யனார் கோயில் தேரோட்டம்