×

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தனிடம் இலங்கை பாஸ்போர்ட்டை ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு..!!

சென்னை: உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட சாந்தனின் இலங்கை பாஸ்போர்ட் அவரிடம் திருப்பி வழங்கப்பட்டது. சாந்தனின் இலங்கை பாஸ்போர்ட்டை சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் அவரிடம் திருப்பி ஒப்படைத்தது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் விதிக்கப்பட்டு உச்சநீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டவர் சாந்தன். 1995-ல் காலாவதியாகிவிட்ட தனது பாஸ்போர்ட்டை புதுப்பிக்க திருப்பி தரக்கோரி சாந்தன், சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில், இந்த மனு நீதிபதி தங்க மாரியப்பன் முன் இன்று விசாரணைக்கு வந்தது. திருச்சி முகாமில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சாந்தன் அழைத்து வரப்பட்டு, நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர், சாந்தனின் பெயர், அடையாளங்களை சரிபார்த்து பாஸ்போர்ட்டை அவரிடம் நீதிபதி தங்க மாரியப்பன் உத்தரவிட்டார். அதேசமயம் நீதிமன்றத்துக்கு தேவைப்படும் பட்சத்தில் பாஸ்போர்ட்டை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவைத் தொடர்ந்து சாந்தனின் பாஸ்போர்ட் அவரிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.

Tags : Santan , Rajiv Gandhi, Sri Lanka, Passport, Court Order
× RELATED ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை...