×

பாணாவரம் அருகே சுரங்க பாதையில் சூழ்ந்த தண்ணீர்-நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பாணாவரம் : பாணாவரம் அருகே சுரங்க பாதையில் தண்ணீர் சூழ்ந்ததால் ஆபத்தான முறையில் தண்டவாளத்தை மாணவர்கள் கடந்து செல்கின்றனர். எனவே, இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரம் அருகே உள்ளது காட்டுப்பாக்கம் ஊராட்சி. இப்பகுதிக்கு, கன்னிகாபுரம், மேட்டுக்குன்னத்தூர், ராமாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள், பல்வேறு பணி நிமித்தமாக தினந்தோறும் வந்து செல்கின்றனர். குறிப்பாக பள்ளி மாணவர்கள் தினமும் பள்ளிக்கு வந்து செல்வது வழக்கம்.

    இந்நிலையில், இங்குள்ள ரயில்வே சுரங்க பாதையில் மழை நீர் தேங்கி இடுப்பளவு வரை தண்ணீர் உள்ளதால், அப்பகுதியில் முற்றிலும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் தினமும் பள்ளிக்கு செல்லும்  மாணவர்கள், வாரச்சந்தைக்கு செல்வோர், பொதுமக்கள் உள்ளிட்டோர் ஆபத்தான முறையில் ரயில்வே தண்டவாளத்தை கடந்து சென்று வருகின்றனர். மேலும் மாணவர்கள் சைக்கிளுடன் தண்டவாளத்தைக் கடக்கும் போது கடும் சிரமமும், மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.

இதையறிந்த ஊராட்சி மன்ற தலைவர் தணிகாசலம் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், சுரங்கப்பாதையில் உள்ள தண்ணீரை மோட்டார் மூலம் வெளியேற்றினர். இருந்தாலும் தொடர் நீர்வரத்து காரணமாக தண்ணீர் வடியவில்லை. இதனால் மாணவர்களின் பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப தயக்கம் காட்டி வருவதோடு, பல்வேறு தரப்பினரும் ரயில்வே தண்டவாளத்தில் கடக்க தினமும் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Panavaram , Panavaram: Students are dangerously crossing the railway track as the tunnel is surrounded by water near Panavaram.
× RELATED பாணாவரம் அடுத்த மகேந்திரவாடி மலைக்கு...