×

பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு 18 ஆயிரம் சிறுவர்களை பள்ளிக்கு அழைத்து வர ஏற்பாடு

*கல்வி போதிக்க நடவடிக்கை

நாமக்கல் : நாமக்கல் மாவட்டத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியுள்ளது. 18 ஆயிரம் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வருவதற்காக, இந்த கணக்கெடுப்பு துவங்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் அனைவரும் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும் என்பதை அடிப்படையாக வைத்து மத்திய, மாநில அரசுகள் கல்வித்துறையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்து வருகிறது. அதன்படி, 15 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தமிழில், எழுத படிக்க தெரிய வேண்டும் என்ற நோக்கில், புதிய பாரத எழுத்தறிவு திட்டம் துவங்கப்பட்டுள்ளது.

இதனுடைய அடுத்த தொடர்ச்சியாக பள்ளி செல்லும் வயதுடைய 6 முதல் 15 வயதுக்குட்பட்ட அனைவரையும் பள்ளிக்கு அழைத்துவர வேண்டும் என்பதை அடிப்படையாக கொண்வு, பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி துவங்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, பள்ளிபாளையம், குமாரபாளையம், வெண்ணந்தூர், எலச்சிப்பாளையம், மல்லசமுத்திரம், நாமகிரிப்பேட்டை, சேந்தமங்கலம், கொல்லிமலை, எருமப்பட்டி, மோகனூர், பரமத்தி மற்றும் கபிலர்மலை என 15 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியங்களில் சுமார் 18 ஆயிரம்  பள்ளி செல்லா குழந்தைகள் இருப்பது, கடந்தகால கணக்கெடுப்பின்படி பதிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது இந்த குழந்தைகளை கண்டறிந்து, பள்ளிக்கு அழைத்து வரும் பணியில், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஒவ்வொரு வட்டாரத்திலும் ஆசிரியர் பயிற்றுநர்கள் பணியாற்றி வருகிறார்கள். மாவட்டம் முழுவதும் 170 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களின் 150 பேர் பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து, பள்ளிக்கு அழைத்து வரும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பள்ளி செல்லா குழந்தைகள் கோழிப்பண்ணைகள், ஓட்டல்கள், தொழிற் சாலைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குழந்தை தொழிலாளர்களாக பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களை அங்கிருந்து மீட்டு, பள்ளிக்கு அழைத்துவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த கணக்கெடுப்பு பணியின்போது, குழந்தைத் தொழிலாளர் ஒழிப்புத்துறை அலுவலர்கள், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் மற்று்ம காவல் துறையினரும் உடன் செல்கிறார்கள்.
இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளர் புகழேந்தி கூறுகையில், ‘மாவட்டத்தில் உள்ள 15 ஒன்றியங்களிலும் கணக்கெடுப்பு பணி துவங்கப்பட்டுள்ளது. வரும் ஜனவரி 11ம் தேதி வரை இந்த பணி நடைபெறும்.

இந்த பணியின்போது பள்ளி செல்லா குழந்தைகள் கண்டறியப்பட்டு, அவர்களின் பெற்றோர்களுக்கு அறிவுரைகள் வழங்கி, குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துவர ஏற்பாடு செய்யப்படும்.
வர மறுக்கும் குழந்தைகளுக்கு உரிய அறிவுரை கூறி பள்ளியில் சேர்த்து கொள்ளப்படுவார்கள். பள்ளி வரும் வயதுடைய குழந்தைகளை சட்டத்துக்கு விரோதமாக தொழிற்சாலைகள், செங்கல் சூளைகள் மற்றும் கோழிப்பண்ணைகளில் வேலைக்கு வைத்திருந்தால், உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, குழந்தைகள் மீட்கப்படுவார்கள்’ என்றார்.

மல்லசமுத்திரம் : மல்லசமுத்திரம் ஒன்றியத்தில் பள்ளி செல்லா, இடைநின்ற மற்றும் மாற்றுத்திறன் குழந்தைகள் கண்டறியும் பணி மங்காளம், காளிப்பட்டி, மறப்பரை மற்றும் பாலமேடு கிராமத்தில் நடைந்தது. மல்லசமுத்திரம் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வட்டார வளமைய மேற்பார்வையாளர்(பொ) ராஜ ராஜேஸ்வரி தலைமையில் ஆசிரியர் பயிற்றுநர்கள் சத்யசிவா, சுரேஷ், கவிதா, வட்டார வளமைய சிறப்பு பயிற்றுநர்கள் பூமாதேவி, ஜென்சி ராணி, பொற்கொடி, செல்வகுமார் மற்றும் மனோன்மணி ஆகியோர் கலந்துகொண்டு 14 குழந்தைகள் கண்டறிந்து, அவர்கள் குறித்த தகவல்களை செல்போன் செயலியில் பதிவேற்றம் செய்தனர்.


Tags : Namakkal: Namakkal district school cella children census work has started. 18 thousand children were invited to school
× RELATED வெப்ப அலையின் தாக்கம்...