ஜவுளித் தொழிலை காப்பாற்ற பருத்தி மீதான இறக்குமதி வரி ரத்து செய்ய வேண்டும்; மக்களவையில் திமுக வலியுறுத்தல்

புதுடெல்லி: ஜவுளித் தொழில் நிறுவனங்களை கடுமையான பாதிப்பிலிருந்து மீட்க பருத்தி மீதான 11 சதவீத இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டுமென மக்களவையில் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு வலியுறுத்தினார். மக்களவையில் கேள்வி நேரத்தில் டி.ஆர்.பாலு எம்பி பேசியதாவது:

தமிழகத்தின் திருப்பூரில் 10,000 பின்னலாடை நிறுவனங்கள் உள்ளன. அவைகளில் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த 1985ம் ஆண்டில் இந்நிறுவனங்களின் ஏற்றுமதி ரூ.15 கோடியாக இருந்த நிலையில், 37 ஆண்டுக்குப்பிறகு தற்போது ரூ.30,000 கோடியாக உள்ளது. பின்னலாடை நிறுவனங்களுக்கு தேவையான பருத்தி உற்பத்தி தமிழகத்தில் வெறும் 3 முதல் 5 சதவீதம் மட்டுமே உள்ளது. 120 லட்சம் மூட்டை பருத்தி தேவை இருக்கும் நிலையில், உற்பத்தி வெறும் 3 லட்சம் முதல் 5 லட்சம் மூட்டை மட்டுமே.

தேவைக்கும் விநியோகத்திற்கும் மிகப்பெரிய இடைவெளி நிலவுகிறது. இதனால் பருத்தியை இறக்குமதி செய்தால் மட்டுமே உலகின் பிற நிறுவனங்களுடன் திருப்பூர் போட்டி போட முடியும். இந்த நிலையில், பருத்தி இறக்குமதி செய்ய ஒன்றிய அரசு 11 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கிறது. இதன் காரணமாக ஜவுளித் துறை மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல நிறுவனங்கள் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. உற்பத்தி சரிவால் தொழிலாளர்கள் பலர் வேலைவாய்ப்பை இழந்து வருகின்றனர். எனவே, பருத்தி இறக்குமதி மீதான 11 சதவீத வரியை ஒன்றிய அரசு ரத்து செய்து ஜவுளி தொழிலை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: