×

தமிழகத்தில் அடுத்த பத்தாண்டுகளில் 65,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி: அமைச்சர் செந்தில்பாலாஜி திட்டவட்டம்

சென்னை: தமிழகத்தில் அடுத்த பத்தாண்டுகளில் மின் உற்பத்தி 65 ஆயிரம் மெகாவாட்டாக உயரும் என்று மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். சென்னை, அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில், நடப்பாண்டில் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்குவது குறித்து சிறப்பு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதன் பின்னர் அமைச்சர் செந்தில்பாலாஜி நிருபர்களிடம் கூறியிருப்பதாவது: மின்வாரியத்தின் மூலமாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, 2.67 கோடி மின்நுகர்வோரில் தற்போது 1.20 கோடி பேர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைத்துள்ளனர். எனவே, நுகர்வோர் தங்கள் ஆதார் எண்ணை மாத இறுதிக்குள் இணைக்க கேட்டுக்கொள்கிறேன். மேலும், மின் கட்டண உயர்வால் வருட வருவாய் 19 ஆயிரம் கோடி வரும் என கணக்கிடப்பட்டது.

ஆனால், சிறு, குறு தொழில் நிறுவனங்கள், கைத்தறி, விசைத்தறி ஆகியவை மற்றும் சில பிரிவுகளில் மின் கட்டணம் குறைக்கப்பட்டதால் மாதந்தோறும் 1000 கோடி அளவிற்கு தான் கூடுதலாக வருவாய் வருகிறது. மாண்டஸ் புயலால் மின் வாரியத்திற்கு ஏற்பட்ட இழப்புகள் குறித்து தரவுகள் சேகரிக்கப்பட்டு முழுவிவரங்கள் விரைவில் வெளியிடப்படும். மின் வாரியத்தைப் பொறுத்தவரை 20,000 மெகாவாட் அளவிற்கு கூடுதலாக மின் உற்பத்தி செய்வதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. தற்போதைய தமிழகத்தின் மின் வாரியத்திற்கு சொந்த நிறுவு திறன் மற்றும் தனியார் உட்பட 32,500 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனை இருமடங்காக்கும் வகையில் அடுத்த பத்தாண்டிற்குள் இந்த மொத்த நிறுவு திறன் 65 ஆயிரம் மெகாவாட்டாக உயர்த்த திட்டமிடப்பட்டு வருகின்றன.

ரஃபேல் கைக்கடிகார விகாரத்தில் மடியில் கனமில்லை என்றால் வழியில் பயமில்லை என்று இருக்கலாம். ஆனால் அண்ணாமலைக்கு மடியில் கனம் இருக்கிறது. தூய்மையான அரசியல்வாதி என்றால் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை கைக்கடிகாரம் வாங்கிய ரசீதை வெளியிட வேண்டும். திமுக அரசு வெளிப்படை தன்மையோடு செயல்படுகிறது. இந்தநிலையில், வாய்புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று குற்றச்சாட்டை அண்ணாமலை பேசி வருகிறார்.
அவர் யாரிடமோ கைக்கடிகாரத்தை வெகுமதியாக வாங்கி இருக்கிறார் என்று நினைக்கிறேன்.அதற்கான ரசீதை தயார் செய்துக்கொண்டிருக்கிறார். விரைவில் அவை எக்ஸெல் சீட்டில் வெளியிடப்படும்.

Tags : Tamil ,Nadu ,Minister ,Senthilbalaji , Tamil Nadu to generate 65,000 MW of electricity in next decade: Minister Senthilbalaji's plan
× RELATED தமிழக அரசின் சீரிய திட்டமான இலவச...