விபத்தில் உயிர்தப்பிய துணை முதல்வர்: அரியானாவில் பரபரப்பு

ஹிசாரி: அரியானாவில் துணை முதல்வர்  துஷ்யந்த் சவுதாலா சென்ற வாகனம் விபத்தில் சிக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.அரியானா மாநில துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா நேற்றிரவு ஹிசாரில் இருந்து சிர்சாவுக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது பனிமூட்டம் அதிகமாக இருந்ததால், துணை முதல்வர் சென்ற வாகனமும் அவரது கான்வாயில் சென்ற காரும் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டன. இந்த விபத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் ஒருவர் காயமடைந்துள்ளார். துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலாவுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. துணை முதல்வர் விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நிலையில்,

மேற்கண்ட வாகனங்கள் தொடர்ந்து சிர்சாவை நோக்கிச் சென்றன. இச்சம்பவம் குறித்து ஹிசார் காவல்துறை செய்தித் தொடர்பாளர் விகாஸ் குமார் கூறுகையில், ‘துணை முதல்வர் சென்ற வாகனமும், கான்வாய் வாகனமும் மிதமான வேகத்தில் சென்றதால், யாருக்கும் பலத்த காயம் ஏற்படவில்லை. கடுமையான பனிமூட்டம் இருந்ததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது’ என்றார். ஏற்கனவே நேற்று மாநில அமைச்சர் அனில் சென்ற கார் விபத்தில் சிக்கிய நிலையில், தற்போது துணை முதல்வரின் காரும் விபத்தில் சிக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: