செய்யாறு அடுத்த வயலூரில் கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியல்-3 மணி நேரம் பரபரப்பு; ஆர்டிஓ சமரசம்

செய்யாறு:செய்யாறு அருகே கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் தொடர்ந்து 3 மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் ஆர்டிஓ அனாமிகா பேச்சுவார்த்தை நடத்தினார்.திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த வயலூர் கிராமத்தில் கல்குவாரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கல்குவாரி அமைப்பதால் சுற்றுச்சூழல் மற்றும் விவசாயம் பாதிக்கப்படும், குடிநீர் மாசடையும், வீடுகள் சேதமடையும் என வயலூர், அழிவிடைதாங்கி உட்பட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று காலை 7 மணியளவில் காஞ்சிபுரம்- கலவை சாலை, வயலூர் கூட்ரோடு பகுதியில் வயலூர், அழிவிடைதாங்கி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பலர் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கல்குவாரிக்கு எதிராக கோஷமிட்டனர்.இதுகுறித்து தகவலறிந்த செய்யாறு டிஎஸ்பி வெங்கடேசன், பிரம்மதேசம், மோரணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பாபா, சதாசிவம், சுந்தரம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, ஆர்டிஓ மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து கல்குவாரி அமைக்க அனுமதிக்கமாட்டோம் என உறுதியளித்தால்தான் மறியலை கைவிடுவோம் என ஆவேசமாக தெரிவித்தனர்.இதையடுத்து, காலை 9.45 மணியளவில் சம்பவ இடத்திற்கு வந்த செய்யாறு ஆர்டிஓ ஆர்.அனாமிகா சமரசம் பேசினார். அப்போது, கிராம மக்கள் கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்டிஓவிடம் கோரிக்கை மனு அளித்தனர். தொடர்ந்து ஆர்டிஓ, கல்குவாரி இடத்தை நேரில் பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தன்பேரில் கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.  

இந்த மறியல் காரணமாக சிப்காட்டில் உள்ள தொழிற்சாலைகளுக்கு செல்லும் தொழிலாளர்கள், பெருங்கட்டூர், அழிவிடைதாங்கி, வடமணப்பாக்கம் ஆகிய கிராமங்களில் உள்ள பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால், சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதித்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: