செய்யாறில் தீபாவளி சிட்பண்ட் நடத்திய தனியார் நிதி நிறுவனம் ரூ.69 கோடி மோசடி: 621 பேர் போலீசில் புகார்

செய்யாறு: செய்யாறில் தீபாவளி சிட்பண்ட் என்ற பெயரில் தனியார் நிதி நிறுவனம் ரூ.69 கோடி வரை மோசடி செய்துள்ளதாக 621 பேர் இதுவரை போலீசில் புகார் செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு நகரில் தனியார் நிதி நிறுவனம் தீபாவளி பரிசு சிட்பண்ட் என்ற பெயரில் ஒரு திட்டத்தை அறிவித்தது. இதில் செய்யாறு, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் உட்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் முகவர்கள் மூலம் பணம் கட்டினர். ஆனால் பணம் கட்டியவர்களுக்கு, அந்த நிறுவனம் தீபாவளி பரிசு பொருட்களை வழங்கவில்லை. முகவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். போலீசார் அறிவுரையின்படி முகவர்கள், பணம் கட்டி ஏமாந்தவர்கள் செய்யாறு போலீஸ் நிலையத்தில் தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர். அதன்படி, நேற்று முன்தினம் வரை 621 பேர் புகார் செய்துள்ளனர். இப்புகாரின்படி ரூ.69 கோடியே 42 லட்சத்து 9ஆயிரத்து 630 வரை மோசடி செய்ததாக தெரிய வந்துள்ளது. பொதுமக்கள் அளித்த புகார்கள் மீது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: