போபால்: அனைத்து துறைகளிலும் தோல்வியுற்ற மத்திய பிரதேச பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. மத்திய பிரதேசத்தில் 230 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில் ஆளும் பாஜகவுக்கு 127 எம்.எல்.ஏ.க்களும், காங்கிரஸுக்கு 96 எம்.எல்.ஏக்களும் உள்ளனர். இந்த நிலையில் மத்திய பிரதேச சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி வரும் 23ம் தேதி வரை நடக்கிறது. ஆளும் பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருகிறது.
இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவர் கமல்நாத், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது எடுக்கப்பட்ட முடிவின்படி, அனைத்து துறைகளிலும் தோல்வியுற்ற ஆளும் பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும். இதற்காக சட்டமன்ற செயலகத்திற்கு காங்கிரஸ் சார்பில் ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து சட்டமன்ற சபாநாயகர் கிரிஷ் கவுதம் நேற்று மாலை அனைத்து கட்சி கூட்டம் நடத்தினார்.
எதிர்க்கட்சித் தலைவர் கோவிந்த் சிங்கும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார். தொடர்ந்துஎதிர்க்கட்சித் தலைவர் கோவிந்த் சிங் கூறுகையில், ‘பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும். அப்போதைய விவாதத்தின் போது, விலைவாசி உயர்வு, மோசமான சட்டம் ஒழுங்கு, விவசாயிகளின் அவலநிலை, வேலையின்மை, கல்வியின்மை, ஊழல் போன்ற பிரச்னைகளை எழுப்ப உள்ளோம். மக்கள் விரோத கொள்கைகளை அம்பலப்படுத்துவோம். சட்டமன்ற அமர்வுகளின் நாட்கள் எண்ணிக்கையை குறைக்க மாநில அரசு சதி செய்து வருகிறது’ என்றார். இன்றைய கூட்டத் தொடரில் காங்கிரஸ் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதால், முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சிக்கு ஆபத்தில்லை என்றாலும் கூட அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
