×

கலைஞர், அன்பழகனை போல நண்பர்களை அரசியலில் பார்ப்பது மிக, மிக அரிது: பேராசிரியர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

சென்னை: ‘‘கலைஞர், அன்பழகனை போல நண்பர்களை அரசியலில் பார்ப்பது என்பது மிக, மிக அரிது’’ என்று நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டினார். பேராசிரியர் அன்பழகனின் நூற்­றாண்டு நிறைவு விழாவினையொட்டி திமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் 100 பொதுக்கூட்­டங்கள் நடத்துவது என முடிசெய்யப்பட்டது. அதன்படி தமிழ்நாடு முழுவதும் கடந்த 16ம் தேதி (வெள்ளிக்கிழமை) பேராசிரியரின் நூற்­றாண்டு நிறைவுப் பொதுக்கூட்­டம் நடந்தது. சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்­டணி கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்­டம் நேற்று மாலை சென்னை வேப்பேரி பெரியார் திடலில் நடந்தது.

பொதுக்கூட்டத்திற்கு திமுக பொது செயலாளர் அமைச்சர் துரைமுருகன் தலைமை தாங்கினார். சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் பி.கே.சேகர்பாபு வரவேற்றார். திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு, துணைப் பொது செயலாளர்கள் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, க.பொன்முடி, ஆ.ராசா எம்.பி, அந்தியூர் ப.செல்வராஜ் எம்.பி., கனிமொழி எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பேராசிரியர் நூற்றாண்டு நினைவு சிறப்பிதழை அமைச்சர் துரைமுருகன் வெளியிட, தி.க. தலைவர் கி.வீரமணி பெற்று கொண்டார்.பொதுக்கூட்­டத்தில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

முதலில் நான் மனிதன், இரண்டாவது நான் அன்பழகன், மூன்றாவது நான் சுயமரியாதைக்காரன், நான்காவது நான் அண்ணாவின் தம்பி, ஐந்தாவது கலைஞரின் தோழன் என்று சொல்லி இறுதிவரை வாழ்ந்தவர் பேராசிரியர். 6வது நான் என உரிமையோடு நான் கூற விரும்புவது. அவர் எனது பெரியப்பா. இன்று அவருக்கு நூற்றாண்டு விழாவை  எடுத்து கொண்டிருக்கிறோம். பேராசிரியர் நூற்றாண்டுவிழாவையொட்டி நான் சென்னை  நந்தனத்தில் உள்ள ஒருங்கிணைந்த நிதித்துறை வளாகத்திலே மார்பளவு சிலையை  திறந்து வைத்தோம். 11 அரசு அலுவலகங்கள் இயங்கி வரக்கூடிய அந்த வளாகத்திற்கு  பேராசிாயர் அன்பழகன் மாளிகை என்று பெயர் சூட்டியிருக்கிறோம்.

பேராசிரியர் படைத்திருக்கக்கூடிய நூல்களை நாட்டுமையாக்கி, அந்த நூல் உரிமை தொகை,  முழுமையாக பேராசிரியர் குடும்பத்துக்கு வழங்கியிருக்கிறோம். பேராசிரியர்  நிரந்தர புகழ் சேர்க்கும் வகையில் 7500 கோடி மதிப்பில் பேராசிரியர் பள்ளி  மேம்பாட்டு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 16ம் தேி தமிழகம் முழுவதும்  நூற்றாண்டு விழாவை திமுக சார்பில் இதுவரை வரலாற்றில் இல்லாத அளவுக்கு 100  பொதுக்கூட்டங்களை  நடத்தி முடித்து இருக்கிறோம். கூட்டணி கட்சி தலைவர்கள்  பங்கேற்று இருக்கக்கூடிய கூட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது.
நட்பு, புரிதலோடு இருந்திருக்கிறார்கள் என்றால், அது கலைஞரும், பேராசிரியருமாக தான் இருந்திருக்க வேண்டும்.

எதையும் பேராசிரியரிடம் சொல்லிவிட்டு நிறைவேற்ற வேண்டும் என்று நினைப்பார் கலைஞர். கலைஞர் செய்தால் சரியாக தான் இருக்கும் என்று நினைப்பார் பேராசிரியர். இத்தகைய நண்பர்களை அரசியலில் பார்ப்பது என்பது மிக, மிக அரிது. இந்த இயக்கத்தை தலைவர் கலைஞருக்கு பிறகு வழிநடத்த தகுதியானவன் ஸ்டாலின் தான் முதலில் சொன்னவர் எனது பெரியப்பா பேராசிரியர். எனது அரசியல் வாழ்க்கை அவரிடம் இருந்து தான் ஆரம்பித்தது. அவர் அளித்த ஊக்கத்தின் காரணமாக தான் இன்று அண்ணா அறிவாலயத்தையை கட்டி காக்க கூடிய மிகப்பெரிய பொறுப்பை ஏற்கும் பாக்கியம் எனக்கு கிடைத்து இருக்கிறது.

இன்றைக்கு தமிழகத்தையே காக்கக்கூடிய பொறுப்பு கிடைத்திருக்கிறது. இளைஞர் அணிக்கு அன்பகம் முதன் முதலில் எப்படி கிடைத்தது. அதற்கும் பேராசிரியர் தான் காரணம்.
கலைஞரின் ஆற்றல் ஸ்டாலினிடத்தில் தெரிகிறது என்று 30 ஆண்டுகளுக்கு முன்பே பாராட்டியவர் பேராசிரியர். வாரிசு வாரிசு என்று சொல்லி கொண்டு இருக்கிறார்களே, வாரிசு என்ற குற்றச்சாட்டை சுமத்திய போது கல்வெட்டு போல எனக்கு பாராட்டு பத்திரம் கொடுத்தவர் பேராசிரியர். கலைஞருக்கு மட்டுமல்ல, எனக்கும் ஸ்டாலின் வாரிசு தான் என்று சொன்னார். அடுத்த தலைமுறையை பாதுகாக்கக்கூடிய கடமை அவருக்கு உண்டு என்று துணிச்சலாக சொன்னவர் பேராசிரியர். திமுகவின் செயல் தலைவராக முன்மொழிந்தவரும் பேராசிரியர் தான்.

தலைவர் மறைவுக்கு பின்னர் தலைவராக என்னை முன்மொழிந்ததும் எனது பெரியப்பா தான். நான் இந்த அளவுக்கு தகுதி பெற்றவனாக இருப்பதற்கு காரணம் பேராசிரியர் தான். இன்னும் சில ஆண்டு காலம் வாழ்வார் என்று நான் ஆசைப்பட்டேன். அவர் எந்த அளவுக்கு கோபக்காரரோ அந்த அளவுக்கு பாசக்காரர் என்பதை மறந்து விட  முடியாது. பேராசிரியருக்கு நிகர், போராசிரியர் தான். இன்றைக்கு அவர் புகழை போற்றி கொண்டிருக்கிறோம் என்றால், அவரை பெருமைப்படுத்துவதற்கு அல்ல. கலைஞர் வாழ்ந்த காலத்தில் அவர் அனைத்து பெருமைகளையும் பெற்று விட்டார். வாழ்ந்தால் தமிழக மக்களுக்காக வாழ்வேன். தமிழினத்துக்காக வாழ்வேன். தாழ்ந்து போன தமிழன் தலை நிமிர்ந்து போக வாழ்வேன்.

உரிமையிழந்த இனம், உரிமை பெற வாழ்வேன் என்று உறுதிமொழி எடுத்து கொண்டு வாழ்ந்தவர் பேராசிரியர்.  திராவிட மாடல் ஆட்சியை கலைலஞரிடம் இருந்தும் பேராசிரியரிடம் இருந்தும் தான் நான் பெற்று கொண்டேன். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ்  தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொது செயலாளர் வைகோ எம்.பி, மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில  செயலாளர் முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன்,

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்  திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா,  கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொது செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், தமிழக  வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ஆகியோர் உரையாற்றினர். எழும்பூர்  தெற்குப் பகுதி செயலாளர் எழும்பூர் வி.சுதாகர் நன்றி கூறினார். முன்னதாக  பேராசிரியர் அன்பழகன் புகைப்படக் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின்  திறந்து வைத்தார்.

Tags : Anbazagan ,Chief Minister ,M.K.Stalin ,Prof. Centenary General Meeting , It is very, very rare to see friends in politics like the artist, Anbazhagan: Chief Minister M. K. Stalin's eulogy at the Professor's centenary public meeting.
× RELATED சினிமா ஸ்டண்ட் நடிகர் வீட்டில் திருட்டு