×

திருவண்ணாமலையில் 11 நாள் மகாதீபம் நிறைவு மலையில் இருந்து தீப கொப்பரை கோயிலுக்கு கொண்டுவரப்பட்டது: சிறப்பு பூஜையில் பக்தர்கள் தரிசனம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலைமீது கடந்த 11 நாட்களாக பக்தர்களுக்கு காட்சியளித்த மகாதீபம் நிறைவடைந்ததையொட்டி, தீப ெகாப்பரை நேற்று அண்ணாமலையார் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி கடந்த 6ம் தேதி 2,668 அடி உயர மலைமீது மகாதீபம் ஏற்றப்பட்டது. கடந்த 6ம் தேதி முதல் நேற்று முன்தினம் இரவு வரை தொடர்ந்து 11 நாட்கள் மலை மீது மகா தீபம் காட்சியளித்தது. அதற்காக, அண்ணாமலையார் கோயிலில் இருந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட நெய், திரி ஆகியவை தினமும் மலைக்கு கொண்டுசெல்லப்பட்டு, தினமும் மாலை 6 மணிக்கு மகாதீபம் ஏற்றப்பட்டது. அது நேற்று அதிகாலையுடன் நிறைவடைந்தது.

அதைத்தொடர்ந்து, நேற்று காலை மகாதீப கொப்பரை, அண்ணாமலையார் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. சுமார் 200 கிலோ எடையுள்ள தீப கொப்பரையை தூளி கட்டி தோளில் சுமந்தபடி மலையில் இருந்து கோயிலுக்கு கொண்டு வந்தனர். காலை 7.15 மணிக்கு மலை உச்சியில் இருந்து புறப்பட்ட தீப கொப்பரை, பகல் 1.45 மணிக்கு கோயிலை அடைந்தது. கோயில் 5ம் பிரகாரத்தில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் வைக்கப்பட்ட மகா தீப கொப்பரைக்கு, நேற்று இரவு 7 மணியளவில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பக்தர்கள் தரிசனத்துக்காக வைக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இந்நிலையில், அடுத்த மாதம் 6ம் தேதி நடைபெறும் ஆருத்ரா தரிசனத்தன்று, மகாதீப மை, நடராஜருக்கு அணிவிக்கப்படும். பின்னர், நெய் காணிக்கை செலுத்திய பக்தர்களுக்கு தீபச்சுடர் பிரசாதம் வழங்கப்படும்.

Tags : Thiruvannamalai ,Mahadeepam ,Deepa Kopparai Temple , Thiruvannamalai 11-day Mahadeepam brought from Samuthu Hill to Deepa Kopparai Temple: Devotees darshan at special puja
× RELATED குடிநீர் பாட்டிலில் காலாவதி தேதி...