×

45 இடங்களில் பொருத்தப்பட்டுள்ளது கேமரா கட்டுப்பாட்டுக்குள் வந்தது திருத்துறைப்பூண்டி நகராட்சி: குற்றவாளிகள் தப்பமுடியாது, சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும்

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதியில் தமிழக அரசு நகர பகுதியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் கண்காணிப்பு கேமார பொருத்தும் பணி நிறைவு பெற்றுள்ளதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் சிசிடிவி கண்காணிப்பு மையத்தை இன்று திறந்து வைக்கிறார். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதியில் திமுக ஆட்சி பொறுப்பு ஏற்ற பிறகு நகர்புற மேம்பாடு திட்டத்தில் நகராட்சி குளங்கள், பாசன, வடிகால் வாய்க்கால்கள் மேம்பாடு செய்யப்பட்டுள்ளது. திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதியில் உள்ள ரூ.149 லட்சத்தில் திருக்குளம் மேம்பாடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

அரசு மருத்துவமனையில் ரூ.80 லட்சத்தில் உள்நோயாளிகள் உதவிக்கு வருபவர்கள் தங்குவதற்கு நவீன கட்டிடம் கட்டப்பட்டு முடியும் தருவாயில் உள்ளது. புதிய பேருந்து நிலையம் அருகில் ரூ.295 லட்சத்தில் தினசரி காய்கறி மார்க்கெட் கட்டப்பட்டு வருகிறது. கலைஞர் நகப்புற மேம்பாட்டு திட்டத்தின்கீழ் 10 மண் சாலைகள் ரூ.161.25 லட்சத்தில் பேவர் பிளாக் சாலையாக அமைக்கும் பணி நடைபெறுகிறது. ஜேகேஆர் கார்டன் பகுதியில் ரூ.40 லட்சத்தில் புதிய பூங்கா அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தேளிக்குளம் ரூ.64 லட்சத்தில் மேம்பாடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. சாய்நகரில் பூங்காவினை ரூ.20.50 லட்சத்தில் மேம்பாடு செய்யும் பணியும் நடைபெறுகிறது. வீரன் நகரில் ரூ.25 லட்சத்தில் பாலம் அமைக்கும் பணி நடைபெறுகிறது. நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் நகர்ப்புற ஏழைகளுக்கு ரூ.150 லட்சத்தில் வாழ்வாதாரம் ஏற்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. வேதை சாலையிலுள்ள குப்பை கிடங்கிலுள்ள குப்பைகளை ரூ.109.60 லட்சத்தில் பயோ மைனிங் முறையில் தரம் பிரித்து இடத்தினை மீட்டெடுக்கும் பணியும் தொடங்கப்பட உள்ளது.

திருத்துறைப்பூண்டி நகராட்சி 2-வது வார்டு வெட்டுக்குளம் ரூ.150 லட்சம் மதிப்பீட்டில் துார்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கிராமப் பகுதியில் தான் நமக்கு நாமே திட்டம் திமுக ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. நகரப் பகுதியிலும் நமக்கு நாமே திட்டத்தை விரிவுப்படுத்த வேண்டுமென்ற பொதுமக்களின் கோரிக்கையைடுத்து தமிழக அரசு திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதியில் முதன்முதலாக நமக்கு நாமே திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில்திருத்துறைப்பூண்டி நகரில் குற்றங்களை தடுப்பதற்கு கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டுமென்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.

நகரில் கண்காணிப்பு கேமரா அமைத்து தர வர்த்தக சங்கம் தயாராக உள்ளது என்று வர்த்தக சங்க தலைவர் செந்தில்குமார் தொடர்ந்து பல ஆண்டுகளாக காவல் துறையிடம் வலியுறுத்தி வந்தார். சில மாதங்களுக்கு முன்பு நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன், வர்த்தக சங்க தலைவர் செந்தில்குமார், நகராட்சி ஆணையர் அப்துல்ஹாரிஸ், நகராட்சி நியமனக்குழு உறுப்பினர் பாண்டியன், பொறியாளர் பிரதான் பாபு ஆகியோர் ஆலோசனை நடத்தி,

அதில் நகரப்பகுதியில் நகராட்சி 50 சதவீதம் பங்களிப்பும், வர்த்தக சங்கம் 50 சதவீதம் பங்களிப்பும் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் நகரில் வேதை சாலை, வாணக்கார தெரு, பெருமாள் கோவில், காசுக்கடை தெரு, தெற்கு வீதி, மேட்டுத்தெரு, கீழவீதி தேளிக்குளம், அண்ணாசிலை, நாகை ரோடு, டிமு கோர்ட் ரோடு, காமராஜர் சிலை, பழைய பேருந்து நிலையம், பூக்கடைத்தெரு, புதிய பேருந்து நிலையம், திருவாரூர் சாலையில் அருகே இரண்டு இடங்களில், பழைய ராம மடத்தெரு, மன்னை சாலையில் மூன்று இடங்கள், புனித தெரசாள் பள்ளி, ரயில்வே கேட், ஆட்டூர் ரோடு, காவல் நிலையம் உள்ளிட்ட 45 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி நிறைவு பெற்றுள்ள நிலையில்,

இன்று (சனிக்கிழமை) காலை 11 மணியளவில் திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் எம்எல்ஏ மாரிமுத்து, நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன், வர்த்தக சங்க தலைவர் செந்தில்குமார், டிஎஸ்பி சோமசுந்தரம் முன்னிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் சிசிடிவி கண்காணிப்பு மையத்தை திறந்து வைக்கிறார். கேமராவில் மிக துல்லியமாக பதிவு ஆவதால் நகரில் குற்றங்கள் நடந்தால் உடனே குற்றவாளிகளை பிடித்துவிடலாம், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தலாம்.
மேலும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க கண்காணிப்பு கேமரா உதவும் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

45 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி நிறைவு பெற்றுள்ளது. திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் சிசிடிவி கண்காணிப்பு மையத்தை திறந்து வைக்கிறார்.

Tags : Thiruthurapundi Municipality , Camera control, Thiruthurapundi Municipality, criminals cannot escape
× RELATED திருத்துறைப்பூண்டி நகராட்சியில் 100 சதவீத வாக்கு பதிவை எட்டுவதே நோக்கம்