×

கடைசி கட்டத்தில் திடீர் பரபரப்பு ரஞ்சியை டி20 ஆக்கிய சுதர்சன்-ஜெகதீசன் ஜோடி: தமிழ்நாடு - ஐதராபாத் டிரா

ஐதராபாத்: தமிழகம் - ஐதராபாத் அணிகளிடையே நடந்த ரஞ்சி கோப்பை எலைட் பி பிரிவு லீக் ஆட்டம் டிராவில் முடிந்தது. உப்பல், ராஜிவ் காந்தி ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற தமிழகம் முதலில் பந்துவீச... ஐதராபாத் முதல் இன்னிங்சில்  395 ரன் குவித்து ஆட்டமிழந்தது. கேப்டன் தன்மே அகர்வால் 135, மிக்கில் ஜெய்ஸ்வால் 137*, ரவி தேஜா 72 ரன் விளாசினர். தமிழ்நாடு தரப்பில் சந்தீப் 5, விக்னேஷ் 4, சாய்கிஷோர் ஒரு விக்கெட் எடுத்தனர்.

அடுத்து களமிறங்கிய தமிழகம் சாய் சுதர்சன் 179, ஜெகதீசன் 116, அபராஜித் 115*, கேப்டன் இந்திரஜித் 48 ரன் விளாச, 4 விக்கெட் இழப்புக்கு 510 ரன் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. 115ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய  ஐதராபாத் 3ம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 28 ரன் எடுத்திருந்தது. அகர்வால் 5,   தியாகராஜன் 9 ரன்னுடன் நேற்று கடைசி நாள் ஆட்டத்தை தொடங்கினர். அகர்வால் 46, தியாகராஜன் 69, ரோகித் ராயுடு 45, பிரதீக் 24, அனிகேத் ரெட்டி 19 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் குவிக்கத் தவறினர். காயம் காரணமாக வெளியேறிய தொடக்க வீரர் அபிராத் ரெட்டி மீண்டும் களமிறங்கி 16 ரன்னில் ஆட்டமிழந்தார்.

ஐதராபாத்  2வது இன்னிங்சில் 258 ரன்னுக்கு ஆட்டமிழந்தது (85 ஓவர்). தமிழ்நாடு தரப்பில் சாய் கிஷோர் 5, எல் விக்னேஷ் 2, விஜய் ஷங்கர், அபராஜித்,  சந்தீப் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். 11 ஓவர்கள் வீசுவதற்கான நேரம் மட்டுமே எஞ்சியிருந்த நிலையில், 143 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தமிழ்நாடு 2வது இன்னிங்சை தொடங்கியது. ஓவருக்கு 13 ரன் தேவை என்பதால் ஆட்டம் நிச்சயம் டிரா தான் என ஐதராபாத் வீரர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்ட நிலையில், தமிழக தொடக்க வீரர்கள்  சாய் சுதர்சன், நாராயண் ஜெகதீசன்  இருவரின் ஐடியா வேறாக இருந்தது.

எப்படியாவது வெற்றியை வசப்படுத்திவிட வேண்டும் என்ற வெறியுடன் அவர்கள் ஐதராபாத் பந்துவீச்சை பதம் பார்த்தனர். இது ரஞ்சி டெஸ்ட் போட்டியா? இல்லை டி20யா?  என்ற சந்தேகம் ஏற்படும் வகையில் இருவரின் ஆட்டமும் இருந்தது. சிக்சர்களாக பறக்கவிட்டு பரபரப்பை ஏற்படுத்திய இந்த ஜோடி, முதல் விக்கெட்டுக்கு 6 ஓவரில் 93 ரன் குவித்து மிரட்டியது. சாய் சுதர்சன் 42 ரன் (20 பந்து, 5 பவுண்டரி) விளாசி பெவிலியன் திரும்பினார். தமிழகம் 7 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 108 ரன் குவித்திருந்தபோது, துரதிர்ஷ்டவசமாக போதிய வெளிச்சம் இல்லாததால் ஆட்டம் டிராவில் முடிந்தது.  ஜெகதீசன்  59 ரன்  (22 பந்து, 8 சிக்சர்), இந்திரஜித் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். சாய் சுதர்சன் ஆட்ட நாயகன் விருது பெற்றார். முதல் இன்னிங்ஸ் முன்னிலை காரணமாக தமிழகம் 3 புள்ளிகள் பெற்றது. ஐதராபாத் 1 புள்ளியுடன் திருப்தி அடைந்தது.


Tags : Sudarsan ,Jegatheesan ,Ranji ,Tamilnadu ,Hyderabad , Final Stage, Sudden Excitement, Ranji, Tamil Nadu - Hyderabad, Draw
× RELATED அதிகம் எல்லாம் அதிகம் (சென்னை-பஞ்சாப் ஆட்டம் வரை)