×

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் 3 கூட்டு குடிநீர் திட்டங்களை செயல்படுத்த ரூ.4,194 கோடி: நிர்வாக ஒப்புதல் வழங்கி தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: நகராட்சி நிர்வாகம்  மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் 3 புதிய கூட்டு குடிநீர் திட்டங்களை செயல்படுத்த ரூ.4,194.66 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து, தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அரசாணையில் கூறி இருப்பதாவது: நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில்ஜல் ஜீவன் திட்டம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கீழ்க்கண்ட 3 புதிய கூட்டு குடிநீர் திட்டங்களை செயல்படுத்த நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் கடந்த 14ம் தேதி (புதன்) ரூ.4,194.66 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி,
* காவிரி ஆற்றினை நீராதாரமாக கொண்டு ரூ.4,187.84 கோடி மதிப்பீட்டில் ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை நகராட்சிகள், முதுகுளத்தூர், மண்டபம், சாயல்குடி, தொண்டி, ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சிகள், ராமநாதபுரம், திருப்புலானி, பரமக்குடி, போகலூர், நயினார்கோயில், மண்டபம், கமுதி, கடலாடி, முதுகுளத்தூர், திருவாடானை மற்றும் ஆர்.எஸ்.மங்கலம் ஆகிய 11 ஊராட்சி ஒன்றியங்களை சார்ந்த 2,306 ஊரக குடியிருப்புகள் மற்றும் திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் நகராட்சி, நெய்க்காரப்பட்டி, கீரனூர் பேரூராட்சிகள் ஒட்டன்சத்திரம், பழனி, தொப்பம்பட்டி, ரெட்டியார்சத்திரம், வடமதுரை, வேடசந்தூர் மற்றும் திண்டுக்கல் ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்களை சார்ந்த 1,422 ஊரக குடியிருப்புகளில் 3,19,192 வீட்டு குடிநீர் இணைப்புகளுடன் 30.40 லட்சம் மக்கள் பயன்பெறும் கூட்டு குடிநீர் திட்டம்.

* புதுஏரி கால்வாயில் ராமன்ஜிகண்டிகை கிராமத்திற்கு அருகில், 5 ஆழ்துளை கிணறுகளை நீராதாரமாக கொண்டு ரூ.3.64 கோடி மதிப்பீட்டில் திருவள்ளூர் மாவட்டத்தை சார்ந்த பூண்டி ஊராட்சி ஒன்றியம் அம்மம்பாக்கம் மற்றும் கூனிப்பாளையம் ஊராட்சிகளை சார்ந்த அம்மம்பாக்கம் மற்றும் 10 ஊரக குடியிருப்புகளுக்கு 717 வீட்டு குடிநீர் இணைப்புகளுடன் சுமார் 4,900 மக்கள் பயன்பெறும் கூட்டு குடிநீர் திட்டம்.

* மாமண்டூர் ஏரியில் 4 ஆழ்துளை கிணறுகளை நீராதாரமாக கொண்டு ரூ.3.18 கோடி மதிப்பீட்டில் திருவள்ளூர் மாவட்டத்தை சார்ந்த பூண்டி ஊராட்சி ஒன்றியம் மாமண்டூர் ஊராட்சியை சார்ந்த  வேளகாபுரம் மற்றும் 10 ஊரக குடியிருப்புகளுக்கு 522 வீட்டு குடிநீர் இணைப்புகளுடன் சுமார் 4,050 மக்கள் பயன்பெறும் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும். இந்த திட்டங்கள் நிறைவடையும்போது நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு நகராட்சி பகுதிகளுக்கு 135 லிட்டர் வீதமும், பேரூராட்சிகளுக்கு 90 லிட்டர் வீதமும் மற்றும் ஊரக பகுதிகளுக்கு 55 லிட்டர் வீதமும் குடிநீர் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu government , 4,194 crores for implementation of 3 joint drinking water projects on behalf of municipal administration and drinking water supply department: Tamil Nadu government notification by giving administrative approval
× RELATED ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நேரடி நெல்...