×

அனைவரும் தமிழராய் எழுவதே திராவிட மாடல் ஆட்சியின் நோக்கம் சிறுபான்மையினர் முயற்சிகளுக்கு தமிழக அரசு துணை நிற்கும்: பீட்டர் அல்போன்சுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: அனைவரும் தமிழராய் எழுவதே திராவிட மாடல் ஆட்சியின் நோக்கம். சிறுபான்மையினர் எடுக்கும் முயற்சிகளுக்கு தமிழக அரசு துணை நிற்கும் என்று சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்சுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடித்தில் கூறியுள்ளார். தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்சுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையம், ‘தேசிய சிறுபான்மையினர் உரிமைகள் நாளினை’ வரும் 18ம்தேதி மதுரை அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தலைமையில் மிக சிறப்பாக நடத்துவது குறித்து மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.

இந்த நல்ல தருணத்தில் தமிழ்நாட்டில் வாழும் மத மற்றும் மொழிச் சிறுபான்மை மக்களுக்கு எனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஒட்டுமொத்த தமிழகத்தின் கல்வி, பொருளாதார மற்றும் தொழில் வளர்ச்சிக்கு சிறுபான்மையினர் ஆற்றும் பங்களிப்பானது மகத்தானது. தமிழ்மொழிக்கும், தமிழ் இலக்கிய உலகுக்கும், தமிழர்களுக்கும், திராவிட பண்பாட்டுக்கும் அவர்கள் ஆற்றியுள்ள தொண்டுக்கும் நான் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். மதம், சாதி ஆகிய எல்லைகளை கடந்து தமிழகத்தில் வாழும் அனைவரும் தமிழர்களாய் ஒன்றிணைந்து தமிழ் சமூகமாக எழுந்து நிற்க வேண்டும் என்பதே நமது திராவிட மாடல் ஆட்சியின் உயரிய நோக்கம்.

மதம், சாதி, மொழி என்ற அடிப்படையில் மக்களைப் பிரிக்காமல் அனைவரும் அனைத்து உரிமைகளும் பெற்று, மனித மாண்புகளுடன் சமூக நீதி பெற்ற சமூகமாக வாழ எனது அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும். இன்றைய இந்தியாவில் சிறுபான்மையினர் எவ்விதமான அச்சுறுத்தல்களுக்கும் உட்படுத்தப்படாமல் தனி மனித உரிமைகளுக்கான பாதுகாப்போடு வாழ்கின்ற முன்னணி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என்பது நமக்கு இருக்கும் சிறப்பான பெருமை.

இந்த நல்ல நாளில் சிறுபான்மை மக்கள் அனைவருக்கும் எனது அன்பையும், வாழ்த்துகளையும் தெரிவியுங்கள். அவர்களது நல்ல முயற்சிகள் அனைத்துக்கும் எனது அரசு துணை நிற்கும். தமிழகத்தை இந்தியாவின் முதல் மாநிலமாக மாற்ற நானும், எனது அரசும் எடுக்கின்ற அனைத்து நடவடிக்கைகளுக்கும் அனைத்து ஒத்துழைப்பினையும் நல்க வேண்டும் என்று வேண்டுகிறேன். கலைஞர் மீதும் என் மீதும் சிறுபான்மைச் சமூகங்களின் மக்கள் கொண்டுள்ள அன்புக்கும், பாசத்திற்கும் நான் என்றும் நன்றி கடன்பட்டுள்ளேன். விழா சிறக்க எனது நல்வாழ்த்துகள். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Tags : Tamil Nadu government ,CM ,M.K.Stal ,Peter Alphonse , Tamil Nadu government will support efforts of minorities: Dravida model government's aim is to make everyone Tamil: Chief Minister MK Stalin's letter to Peter Alphonse
× RELATED மதுரை மாநகராட்சியில் கால்நடை...