×

அரசு டாக்டரின் கையெழுத்தை போலியாக போட்டு 500 பேரிடம் மோசடி: கில்லாடி பெண் கைது

சென்னை: சென்னையில் அரசு டாக்டரின் கையெழுத்தை போலியாக போட்டு 500 பேரிடம் மோசடி செய்த பெண் குறித்து போலீசில் பரபரப்பு புகார் செய்யப்பட்டுள்ளது. சென்னை குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் முதன்மை குடிமை மருத்துவ அதிகாரியாக இருப்பவர் டாக்டர் காமேஷ் பாலாஜி. இவர் கடந்த 11 மாதங்களாக இங்கு பணிபுரிந்து வருகிறார்.

பச்சை மையில் கையெழுத்து போடும் அரசிதழ் அதிகாரி (கெஜட்டட் அதிகாரி) அந்தஸ்தில் உள்ள இவரை பார்ப்பதற்கு சண்முகம், சிவக்குமார் ஆகிய 2 பேர் வந்தனர். தாங்கள் வைத்திருந்த ஆதார் விண்ணப்ப படிவ சான்றிதழை காண்பித்தனர். அதில் டாக்டர் காமேஷ் பாலாஜியின் கையெழுத்து போடப்பட்டிருந்தது. அந்த கையெழுத்தை காட்டி இது உங்களது கையெழுத்து தானா? என்றுகேட்டனர்.

ஆதார் விண்ணப்ப படிவத்தை வாங்கி பார்த்த டாக்டர் காமேஷ் பாலாஜி இது என்னுடைய கையெழுத்து இல்லை என்றும், போலியாக இந்த கையெழுத்து போடப்பட்டு உள்ளது என்றும் தெரிவித்தார். அவரது அலுவலக சீல் ஒன்றும் விண்ணப்ப படி வத்தில் குத்தப்பட்டு இருந்தது. அந்த சீலையும் அவர் ஆராய்ந்து பார்த்தார். அப்போது அதுவும் போலியானது என்று தெரியவந்தது. இது தொடர்பாக இருவரிடமும் அவர் விசாரித்த போது அவர்கள் இந்த போலி கையெழுத்தையும், சீலையும் பயன்படுத்தும் நபர் பற்றிய தகவலை தெரிவித்தனர்.

தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகில் உள்ள இ-சேவை மையத்தில் உங்களது இந்த கையெழுத்தையும், சீலையும் பயன்படுத்தி பணம் வாங்கி வருகிறார்கள் என்றும் அவர்கள் தெரிவித்தனர். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த டாக்டர் காமேஷ் பாலாஜி, தாம்பரம் போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் செய்தார். இது தொடர்பாக தாம்பரம் போலீசார் விசாரணை நடத்தினர். புகாருக்குள்ளான இ-சேவை மையத்துக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த இ-சேவை மையத்தை மேற்கு தாம்பரத்தை சேர்ந்த சசிகலா என்கிற 34 வயது பெண் நடத்தி வந்தது தெரிய வந்தது. அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

அப்போது அவர் மகன் சிஜோ பெயரில் இ-சேவை மையத்தை நடத்தி வருவதும், டாக்டர் காமேஷ் பாலாஜியின் பெயரை போலியாக பயன்படுத்தி வாக்காளர்களிடம் பணம் பறித்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. குரோம்பேட்டையில் உள்ள சிட்டி யூனியன் வங்கியில் ஆதார் ஆபரேட்டராக பணிரிந்து வந்ததாகவும், அதில் கிடைத்த அனுபவத்தை வைத்து இ-சேைவ மையத்தை கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கியதாகவும் கூறினார்.

தன்னிடம் ஆதார் கார்டு, ரேசன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, வருவாய் சான்றிதழ் உள்ளிட்ட பணிகளுக்காக விண்ணப்பிக்க வரும் பலருக்கு கெஜட்டட் அதிகாரி கையெழுத்து தேவைப்படுவதாகவும், அதனை போலியாக தயாரித்து பண வசூலில் ஈடுபடலாம் என்று அப்போது தான் தனக்கு தோன்றியதாகவும் மோசடி பெண் சசிகலா தெரிவித்தார். இதையடுத்து திருநீர்மலை பகுதியை சேர்ந்த சண்முகம் என்பவர் மூலமாக டாக்டர் காமேஷ் பாலாஜியின் கையெழுத்து மற்றும் சீலை போலியாக தயாரித்து பயன்படுத்தி வந்தததாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து போலீசார் சசிகலாவை கைது செய்தனர். இந்த சீலை பயன்படுத்தி சுமார் 500 பேரிடம் சசிகலா மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. போலி கையெழுத்தை போட்டு கொடுப்பதற்காக ஒவ்வொருவரிடமும் தலா ரூ.300 வசூல் செய்துள்ளார். இவர் இதை போல் மேலும் பல அரசு முத்திரைகளை போலியாக பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டி ருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். சசிகலா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை காவலில் எடுத்து விசாரிக்கவும் முடிவு செய்யப்பட்டுளளது.

Tags : Forging government doctor's signature and cheating 500 people: Killadi woman arrested
× RELATED திருச்செந்தூர் அருகே கட்டிட தொழிலாளி அடித்துக் கொலை