×

கண்ணாமூச்சி காட்டும் வடகிழக்கு பருவமழை பாதியளவு கூட நிரம்பாத பச்சையாறு அணை: 100க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பவில்லை

களக்காடு: வட கிழக்கு பருவமழை போதியளவு பெய்யாததால் பச்சையாறு அணை பாதியளவு கூட நிரம்பாததால் 10 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், களக்காடு, நாங்குநேரி பகுதி விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்பட மாநிலத்தின் பல்வேறு மாவட்ட பகுதிகளில் மழை கொட்டி தீர்த்து வருகிறது.

தொடர் மழையினால் ஆறு, குளங்கள், அணைகள் நிரம்பி ததும்புகின்றன. ஆனால் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் எதிர்பார்த்த அளவு மழை பெய்யவில்லை. குறிப்பாக, நெல்லை மாவட்டத்தில் களக்காடு, திருக்குறுங்குடி, மாவடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வட கிழக்கு பருவமழை சரிவர பெய்யவில்லை. அவ்வப்போது பெய்து வரும் மழையினால் பச்சையாறு, உப்பாறு, நாங்குநேரியான் கால்வாய்களில் தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது. இந்த தண்ணீர் குளங்களுக்கு திருப்பி விடப்பட்டு வருகிறது. மழை சரியாக பெய்யாததால் ஆறுகளில் குறைந்தளவு தண்ணீரே செல்கிறது. இதனால் குளங்கள் நிரம்புவதில் சிக்கல் எழுந்துள்ளது. இப்பகுதியில் உள்ள 100க்கும் மேற்பட்ட குளங்கள் இன்னும் நிரம்பவில்லை.

இதேபோல் களக்காடு பச்சையாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்யவில்லை. இதனால் அணையின் நீர்மட்டமும் உயராமலேயே உள்ளது. இந்த அணையின் மொத்த கொள்ளளவு 50 அடி ஆகும். நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 17.50 அடியாகவே உள்ளது. தொடர்ந்து அணைக்கு தண்ணீர் வரத்தும் இல்லை. பாதியளவு கூட அணை நிரம்பவில்லை. பச்சையாறு அணையின் மூலம் களக்காடு, நாங்குநேரி பகுதிகளில் உள்ள 110 குளங்களும், 10 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களும் பாசன வசதி பெற்று வருகின்றன.

இந்நிலையில் அணை நிரம்பாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதனால் விவசாய பணிகளை தொடங்குவதில் தயக்கம் காட்டி வருகின்றனர். களக்காடு மலையடிவார பகுதியில் மட்டுமே விவசாய பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. மழை வலுத்தால் மட்டுமே அணைகளும், குளங்களும் நிரம்பும் என்பதால் களக்காடு பகுதி விவசாயிகள் கனமழையை எதிர்நோக்கி உள்ளனர். ஏற்கனவே தென்மேற்கு பருவமழையும் இப்பகுதியை புறக்கணித்ததால் விவசாயம் செழிக்காத நிலையில் வடகிழக்கு பருவமழையும் கண்ணாமூச்சி காட்டி வருவது பொதுமக்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


Tags : The Northeast Monsoon is disappearing, the Pacchiyar Dam and the ponds are not full
× RELATED முதல்வரின் தனிப் பிரிவில் ஃபெலிக்ஸ் ஜெரால்ட் மனைவி மனு