உலக கோப்பை கால்பந்து: போராடி தோற்றது மொராக்கோ.! பைனலில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ்: டிச.18ல் அர்ஜென்டினாவுடன் மோதல்

தோஹா: உலக கோப்பை கால்பந்து தொடரின் 2வது அரையிறுதியில், மொராக்கோ அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய நடப்பு சாம்பியன் பிரான்ஸ் அணி நாளை மறுநாள் நடைபெற உள்ள பைனலில் அர்ஜென்டினா அணியுடன் மோதுகிறது.

அல் பேட் ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில், உலக கோப்பை அரையிறுதியில் களமிறங்கும் முதல் ஆப்ரிக்க அணி என்ற பெருமையுடன் மொராக்கொ பலம் வாய்ந்த பிரான்ஸ் அணியின் சவாலை எதிர்கொண்டது. 5வது நிமிடத்திலேயே தியோ ஹெர்னாண்டஸ் அபாரமாக கோல் அடிக்க, பிரான்ஸ் 1-0 என முன்னிலை பெற்றது. முன்னணி வீரர்கள் நயிப் ஆகுவர்ட், ரொமைன் செய்ஸ் காயத்தால் அவதிப்பட்டது பின்னடைவாக அமைந்தாலும், நடப்பு சாம்பியனுக்கு அனைத்து வகையிலும் ஈடுகொடுத்த மொராக்கோ வீரர்கள் பதில் கோல் அடிக்க கடுமையாகப் போராடினர்.

பந்தும் அதிக நேரம் அவர்களின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது. கோல் பகுதிக்கு முன்பாக உயரே வந்த பந்தை ஜவாத் எல் யாமிக் தலை கீழாக பல்டி அடித்து பறக்கவிட, கோல் கீப்பர் ஹுகோ லோரிஸ் பாய்ந்து தடுத்ததால் பிரான்ஸ் தப்பிப் பிழைத்தது என்றே சொல்ல வேண்டும். எந்த நேரத்திலும் மொராக்கோ பதில் கோல் அடித்து சமநிலை ஏற்படுத்தி விடும் என்ற நெருக்கடி, பிரான்ஸ் வீரர்களை பதற்றத்திலேயே வைத்திருந்தது. 79வது நிமிடத்தில் மாற்று வீரர் கோலோ முவானி கோல் அடித்து 2-0 என முன்னிலையை அதிகரித்த பிறகுதான் பிரான்ஸ் தரப்பு உற்சாகம் அடைந்தது. விறுவிறுப்பான ஆட்டத்தின் முடிவில் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றியை வசப்படுத்திய பிரான்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. நாளை மறுநாள் நடக்க உள்ள பைனலில் அர்ஜென்டினா - பிரான்ஸ் அணிகள் மோதுகின்றன. அரையிறுதியில் தோல்வியைத் தழுவிய குரோஷியா - மொராக்கோ அணிகள் மூன்றாவது இடத்துக்காக நாளை பலப்பரீட்சையில் இறங்குகின்றன.

Related Stories: