×

மாவட்டத்திலேயே 7 ஏரிகள் கொண்ட அந்தியூரில் படகு இல்லம் அமையுமா?.. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு

அந்தியூர்: ஈரோடு மாவட்டத்திலேயே ஏரிகள் அதிகம் நிறைந்த அந்தியூரில் படகு இல்லம் அமையுமா? என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பொதுமக்கள் எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர். ஈரோடு மாவட்டம், அந்தியூரில் அடர்ந்த வனப்பகுதியின் மத்தியில் வரட்டுப்பள்ளம் அணை அமைந்துள்ளது. இதன் உபரி நீர் வெளியேறி வரும் பகுதிகளில் எண்ணமங்கலம் ஏரி, கெட்டி சமுத்திரம் ஏரி, அந்தியூர் பெரிய ஏரி, சந்திபாளையம், வேம்பத்தி, பிரம்மதேசம், ஆப்பக்கூடல் என ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய ஏழு ஏரிகள் உள்ளன.

இந்த ஏரிகளில் உள்ள தண்ணீர் விவசாயத்திற்கும் மீன் வளர்ப்பிற்கு பெரிதும் பயன்பட்டு வருகிறது. இதனால் அந்தியூர் பகுதியில் சுற்றுலா தலம் அமைக்க வேண்டும் என்பது அந்தியூர் பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையாகவும், கனவாகவும் உள்ளது. கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு வனப்பகுதியில் உள்ள வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் சுற்றுலா தலம் அமைக்க அரசு சார்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அப்போது வனத்துறையின் அனுமதி கிடைக்காததால் திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

அந்தியூர் பகுதி விவசாயத்திற்கு அடுத்தபடியாக செங்கல் உற்பத்தி தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாகும். இவர்களின் மன இறுக்கத்தை குறைக்கும் வகையில் அந்தியூர் பகுதியில் இதுவரை சுற்றுலா தலம் என சொல்லிக் கொள்ளும் வகையில் எந்த இடமும் அமைக்கப்படவில்லை. அந்தியூர் அருகிலேயே தமிழக-கர்நாடக எல்லை பகுதியான பர்கூர் மலைப்பகுதி உள்ளது. இங்குள்ள பர்கூர், தட்டக்கரை வனச்சரங்களுக்கு உட்பட்ட வனப்பகுதிகள் வனவிலங்குகள் நிறைந்த இயற்கை எழில் கொஞ்சும் பகுதியாக உள்ளது.

மேலும் இங்கு சிறு, சிறு சிற்றருவிகள் ஆறுகள் ஓடுகின்றன. இங்கு அரசு சார்பில் எவ்விதமான சுற்றுலா தங்குமிடங்களும் இல்லை. ஆனால் தனியார் சுற்றுலா தங்கும் விடுதிகள் பர்கூர் மலைப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்தியூரில் சுற்றுலா தலம் அமைக்குமாறு, சுற்றுலாத்துறை அமைச்சர்  மதிவேந்தனிடம் எம்எல்ஏ அந்தியூர் ஏ.ஜி. வெங்கடாசலம் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் 2 ஏரிகளில் படகு இல்லங்கள் அமைப்பது குறித்து தமிழ்நாடு அரசு  சுற்றுலாத்துறை விடுதி மண்டல மேலாளர் வெங்கடேஷ் உள்ளிட்டோர் ஆய்வு நடத்தினர்.

மேலும் பர்கூர் மலையடிவாரத்தில் உள்ள வரட்டுப்பள்ளம் அணையிலிருந்து வெளியேறும் உபரிநீர் அடுத்தடுத்து உள்ள கெட்டி சமுத்திரம் ஏரி, பெரிய ஏரி, பிரம்மதேசம் ஏரி, வேம்பத்தி ஏரி மற்றும் ஆப்பக்கூடல் ஏரிகளுக்கு கால்வாய்கள் மூலம் சென்று உபரிநீர் பவானி ஆற்றில் கலக்கிறது. பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான இந்த ஏரிகள் பெரும் பரப்பளவில் உள்ளதால் படகு இல்லங்கள் அமைத்து, பொதுமக்கள் பொழுதுபோக்கும் சுற்றுலா தலமாக மாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்தியூரில் இருந்து பர்கூர் செல்லும் மெயின் சாலையை சேர்ந்தது போல, 77.78 ஹெக்டேர் பரப்பில் கெட்டி சமுத்திரம் ஏரி உள்ளது. அந்தியூரில் இருந்து வெள்ளித்திருப்பூர் செல்லும் மெயின் சாலையை சேர்ந்தது போல அந்தியூர் பெரிய ஏரி 81 ஹெக்டேர் பரப்பில் உள்ளது.

இந்நிலையில் மக்கள் எளிதில் வந்து செல்லக்கூடிய, போக்குவரத்து வசதிகள் நிறைந்த இப்பகுதிகளில் சுற்றுலா தலமாக படகு இல்லம் அமைத்தால் ஈரோடு மாவட்டத்தில் முக்கியத்துவம் நிறைந்த ஒரு பகுதியாக அந்தியூர் மாறும். இதனால் நூற்றுக்கணக்கான மக்கள் வேலை வாய்ப்பு பெறுவர். எனவே  ஏரிகள் நிறைந்த அந்தியூர் பகுதியில் படகு இல்லங்கள் அமைத்து பொதுமக்களின் பொழுதுபோக்கும் வகையில், தமிழக அரசின் துரித நடவடிக்கையை எதிர்பார்த்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பொதுமக்கள் காத்திருக்கின்றனர்.

அமைச்சரிடம் எம்எல்ஏ கோரிக்கை
ஈரோடு மாவட்டத்தில் 7 ஏரிகள் நிறைந்த அந்தியூர் பகுதில், சுற்றுலா தலம் அமைக்க வேண்டும் என சுற்றுலாத்துறை அமைச்சரிடம்  எம்எல்ஏ அந்தியூர் ஏ.ஜி. வெங்கடாசலம் கோரிக்கை மனு  அளித்திருந்தார். இதையடுத்து  ஏரிகள் நிறைந்த அந்தியூர் பகுதி அருகே பெரிய  ஏரி, கெட்டிசமுத்திரம் ஏரிகளில் பொதுமக்கள் பொழுதுபோக்கும் வகையில் படகு  இல்லங்கள் அமைப்பது குறித்து சுற்றுலா துறை அதிகாரிகள் கடந்த நவம்பர் மாதம்  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

சுற்றுலா துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு
அந்தியூர் பெரிய ஏரி, கெட்டிசமுத்திரம் ஏரிகளில் ஊட்டி, கொடைக்கானலில்  உள்ளது போல படகு இல்லங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு வருகிறது. இதையடுத்து இதுகுறித்து தமிழ்நாடு அரசு  சுற்றுலாத்துறை விடுதி மண்டல மேலாளர் வெங்கடேஷ், ஊட்டி படகுத்துறை மேலாளர்  சாம்சன், ஈரோடு மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் மணி மற்றும் அதிகாரிகள்  2 ஏரி பகுதிகளிலும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளனர்.

Tags : Andiur , 7 lakes in the district, a boathouse in Andhiur, environmentalists are waiting
× RELATED வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் காட்டு யானை நடமாட்டத்தால் அச்சம்