×

 2024 நாடாளுமன்ற தேர்தலில் அமேதியில் மீண்டும் ராகுல் போட்டி: உ.பி காங். தலைவர் பேட்டி

அமேதி: வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில், அமேதியில் மீண்டும் ராகுல் போட்டியிடுவார் என்று உ.பி காங்கிரஸ் தலைவர் தெரிவித்து உள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி, கடந்த 2019ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேச மாநிலம், அமேதி தொகுதியிலும், கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் போட்டியிட்டார். இதில் வயநாட்டில் வென்ற ராகுல், அமேதியில் தற்போதைய ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் தோல்வியடைந்தார். காந்தி-நேரு குடும்ப தொகுதியாக இருந்தும், அமேதியில் தொடர்ந்து மூன்று வென்றும், கடந்த தேர்தலில்  ராகுல், தோல்வியடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து, பல இடங்களில் பாஜ தலைவர்கள், ராகுலை விமர்சித்து வந்தனர். அடுத்த தேர்தலில், அமேதியில் போட்டியிட்டு ராகுலை வென்று காட்ட சொல்லுங்கள் என சவால் விட்டு இருந்தனர். இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் நிருபர்களிடம் கூறுகையில், ‘அமேதி மக்களிடம் ராகுல் காந்தியை மீண்டும் அதிக வாக்கு வித்தியாசத்தில் எம்.பி.யாக தேர்ந்தெடுத்து டெல்லிக்கு அனுப்ப வேண்டும் என்பதே எனது வேண்டுகோள். காந்தி-நேரு குடும்பத்திற்கு அமேதியுடன் பழைய உறவு உள்ளது. அதை யாராலும் பலவீனப்படுத்த முடியாது. ராகுல் காந்தி 2024ல் அமேதியில் போட்டியிடுவார். ராகுலின் யாத்திரை ஜனவரி 3 அல்லது 4ம் தேதி உத்தரப் பிரதேசத்தில் நுழையும்’ என்று தெரிவித்தார்.

* ராகுல் நடைபயணத்தில் ரிசர்வ் வங்கி மாஜி கவர்னர்
ராஜஸ்தான் மாநிலத்தில்,ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்றைய நடைபயணத்தில் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் பங்கேற்றார். இதுதொடர்பாக, ராகுலுடன் ரகுராம் ராஜன் நடந்து செல்லும் புகைப்படத்தை பகிர்ந்து காங்கிரஸ் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘பாரத் ஜோடா யாத்திரையில் ராகுலுடன், ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் நடைபயணம் மேற்கொண்டுள்ளார். வெறுப்புக்கு எதிராக நாட்டை ஒன்றிணைக்க மக்கள் அதிகரித்து வருவது நாம் வெற்றி பெறுவோம் என்பதைக் காட்டுகிறது’ என்று கூறி உள்ளது.

Tags : Rahul ,Amethi ,parliamentary elections ,UP Congress , Rahul contests again in Amethi in 2024 parliamentary elections: UP Congress Chairman interview
× RELATED அமேதி, ரேபரேலி தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் யார்..? இன்று முடிவு